பாக். சுப்பர் லீக்கில் இருந்து ஐ.பி.எல். சென்றவர்கள் மீது ‘சட்ட நடவடிக்கை’

m24

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகி இந்திய பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்.) இணைந்த வீரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மொஹ்சின் நக்வி உறுதி அளித்துள்ளார். இந்த இரு லீக்குகளும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சமகாலத்தில் இடம்பெறும் சூழலிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் லாஹோர் கலன்தர் அணியில் இடம்பெற்ற இலங்கையின் தசுன் ஷானக்க அதில் இருந்து விலகி ஐ.பி.எல். இல் இணைந்துள்ளார். காயமடைந்த சாம் கரனுக்கு பதில் அவரை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில் ஷானக்கவுக்கு பதில் கலன்தர் அணி அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் டனியேல் சாம்மை இணைத்துள்ளது. ஏற்கனவே சிம்பாப்வே சகலதுறை வீரர் பிலசிங் முசரபானி பாக். சுப்பர் லீக்கில் இருந்து விலகி ஐ.பி.எல். அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்தார். ‘அந்த வீரர்களுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நாம் நவடிக்கை எடுப்போம்’ என்று நக்வி குறிப்பிட்டார். ‘கடந்த ஆண்டிலும் இதே நிலை ஏற்பட்டது. இம்முறையும் அதே நிகழ்ந்திருக்கிறது’ என்றும் கூறினார்.

தென்னாபிரிக்க வீரர் கோர்பின் பொஸ்ச் கடந்த ஆண்டு பெஷாவர் செல்மி அணிக்காக வாங்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அதில் இருந்து விலகி ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸில் இணைந்தார். இதனால் பாக். சுப்பர் லீக்கில் அவருக்கு ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இம்முறை பாக். சுப்பர் லீக்கில் இருந்து குடகேஷ் மோட்டி, ஜெக் பிரேசர் – மக்குர்க், ஒட்னைல் பார்ட் மற்றும் ஸ்பன்சர் ஜோன் ஆகியோரும் தனிப்பட்ட காரணங்களை கூறி விலகியமை குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். ஆரம்பிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் எதிர்வரும் மார்ச் 26 ஆம் தகதி பாகிஸ்தான் சுப்பர் லீக் ஆரம்பமாகவுள்ளது. மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்டிருக்கும் எண்ணெய் நெருக்கடி காரணமாக இம்முறை தொடர் ரசிகர்கள் இன்றி மூடிய அறையில் நடத்தப்படுவதோடு போட்டிகளை நடத்தும் மைதானங்களும் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளன.