பிரபல ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ. எல். எம். சலீம் அவர்களின் மறைவு – ஒரு காலத்தின் குரல் மௌனமானது.

img 20260325 wa0009

இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.

நிந்தவூரைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட மூத்த இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர், கலாபூஷணம் ஏ. எல். எம். சலீம் அவர்கள் (25.03.2026) இறையழைப்பை ஏற்றுக்கொண்டார்கள் என்பது ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தரப்படுகிறது.

ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீம் அவர்களின் அன்புக்கணவரும், அகீலா மற்றும் அகீல் ஆகியோரின் பாசமிகு தந்தையுமான இவர்,

1966ஆம் ஆண்டிலிருந்து வீரகேசரி நாளிதழின் பிராந்திய செய்தியாளராகத் திகழ்ந்த அவர், ஊடகத் துறையில் அரை நூற்றாண்டைத் தாண்டிய அர்ப்பணிப்பு பயணத்தை மேற்கொண்டார். இதற்கு முன் தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றி, தனது எழுத்தின் மூலம் சமூகத்தின் உண்மைக் குரலாக விளங்கினார்.

“அனார்கலி” மற்றும் “அவதானி” என்ற புனைப் பெயர்களில் எழுதிய அவர், வார்த்தைகளை சமாதானத்தின் பாலமாக மாற்றியவர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் சமூக ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த குரலாகப் போற்றப்பட்டார்.

அவரது சிறப்பான பங்களிப்புகளுக்காக 2008ஆம் ஆண்டு “கலாபூஷணம்” பட்டமும், 2010ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சரின் “வித்தகர்” விருதும் வழங்கப்பட்டது. மேலும், திகாமடுல்ல பௌத்த சிங்கள சங்கத்தினால் “சாஹித்யசூரி” விருதும், 2017ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியல் விருதுகளிலும் கௌரவிக்கப்பட்டார்.

நிந்தவூர் கலை, இலக்கிய பேரவையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராகவும் மூத்த துணைத்தலைவராகவும் இருந்து பல்வேறுபட்ட பங்களிப்பை செய்தவர்,

அம்பாறை மாவட்ட ஊடக சம்மேளனத்தின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றிய அவர்,பல நூற்றுக்கணக்கான கலை, இலக்கிய ஆர்வலர்களையும், ஊடகவியலாளர்களையும் உருவாக்கிய ஒளிவிளக்காக திகழ்ந்தார்.

எனது தந்தையின் பால்யகால நண்பரும், எங்கள் குடும்பத்தின் நெருங்கிய உறவினருமான அவரின் மறைவு, எமக்குப் பேரிழப்பாகும். ஒரு மனிதர் மட்டுமல்ல—ஒரு காலம், ஒரு குரல், ஒரு வழிகாட்டும் ஒளி இன்று நம்மிடமிருந்து நீங்கியுள்ளது.

அவரது மறைவு, ஒரு மனிதரின் இழப்பை மட்டுமல்ல—ஒரு காலத்தின் சாட்சியமாக இருந்த குரலின் மௌனமாகும்.

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கி அருள்வானாக. ஆமீன்.

MAM.Mursith JP
Peace Journalist
Nintavur