இலங்கை கிரிக்கெட் சபை கண்டிப்பான முடிவு
இலங்கை வீரர்கள் சர்வதேச லீக் கிரிக்கெட்டில் ஆடுவதற்கான தடையில்லா சான்றிதழை பெற உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெறுவதை இலங்கை கிரிக்கெட் சபை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் எதிர்வரும் இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில்; வனிந்து ஹசரங்க (லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ்), நுவன் துஷார (றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்), மதீஷ பதிரண (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) மற்றும் எஷான் மாலிங்க (சன்ரைசஸ் ஹைத்ராபாத்) ஆகியோர் பங்கேற்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் டெல்லி கெபிடல்ஸ் வீரர்களான துஷ்மன்த சமீர மற்றும் பத்தும் நிசங்க அதேபோன்று சன்ரைசஸ் அணியின் கமிந்து மென்டிஸ் ஆகியோர் உடல் செயல்திறன் சோதனையில் தேர்ச்சி பெற்று ஏற்கனவே ஐ.பி.எல். ஆட அனுமதியை பெற்றுள்ளனர்.
‘நுவன் துஷார உடல் செயல்திறன் சோதனை அடிப்படையில் ஐ.பி.எல். இல் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழை பெற தகுதி பெற்றுள்ளார்’ என்று இலங்கை சபை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஏற்பட்டிருக்கும் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சைகளை பெற்றுவரும் நிலையில், 2026 ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்கு வனிந்து ஹசரங்க, எஷான் மாலிங்க மற்றும் மதீஷ பத்திரண ஆகியோர் தடையில்லா சான்றிதழுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று வீரர்களும் நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் அல்லது போட்டியின்போது காயமடைந்தவர்களாவர். இதில் பத்திரண ஏற்கனவே ஐ.பி.எல். தொடரின் ஆரம்பப் போட்டிகளை இழந்திருப்பதோடு எதிர்வரும் ஏப்ரல் நடுப் பகுதியில் அந்தத் தொடரில் இணைய அவர் எதிர்பார்த்துள்ளார்.
பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு வீரர்களின் உடல் தகுதி குறித்து முக்கிய அவதானம் செலுத்தியுள்ளது. இலங்கை அணி அடுத்து எதிர்வரும் மே இறுதியிலேயே சர்வதேச போட்டி ஒன்றில் ஆடவிருப்பதோடு இந்தக் காலப்பிரிவில் தேசிய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்துவதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த உடல் தகுதிச் சோதனையில் 2 கி.மீ. ஓட்டம் உட்பட பல சோதனைகளும் உட்படுத்தப்பட்டுள்ளன.
‘தேசிய ஒப்பந்த வீரர்கள் அனைவருக்காகவும் இலங்கை கிரிக்கெட் சபை தற்போது எட்டு வார சிறப்பு உடல் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது’ என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
‘எதிர்வரும் சர்வதேச போட்டிக்கு தயாராகும் வகையில் வீரர்களின் உடல் செயல்திறன் தரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியுடன் சேர்த்து, வீரர்களின் உடல் தகுதி தரத்தைச் சோதிக்கும் வழக்கமான நடைமுறை ஒன்றாக வீரர்கள் உடல் செயல்திறன் சோதனைகைள எதிர்கொள்வது கட்டாயமாகும்.
உடல் செயல்திறன் சோதனையில் தேவையான தரத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்கள் மாத்திரமே தடந்து வரும் உள்ளூர் தொடர் மற்றும் 2026 ஐ.பி.எல். இல் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழை பெற முடியும்’ என்று இலங்கை கிரக்கெட் சபையின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது,


