900 கோல்களை எட்டினார் மெஸ்ஸி

m20

நஷ்வில்லே அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற கொன்ககாப் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இன்டர் மியாமி அணிக்காக கோல் புகுத்திய லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்து 900 கோல்களைப் பெற்ற முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.

பிளோரிடாவில் நடைபெற்ற போட்டியில் மெஸ்ஸி ஏழாவது நிமிடத்திலேயே கோல் புகுத்தியதோடு இரண்டாவது பாதியில் நஷ்வில்லே பதில் கோல் திருப்பி போட்டியை சமன் செய்தது.

38 வயது ஆர்ஜன்டீன வீரரான மெஸ்ஸி தனது 1142 போட்டியிலேயே 900 கோல்களை எட்டியுள்ளார். இதில் அவர் ஆர்ஜன்டீன அணிக்காக 115 கோல்களைப் பெற்றிருப்பதோடு பார்சிலோன அணி சார்பில் அதிகபட்சம் 672 கோல்களை புகுத்தி உள்ளார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

2023 இல் இன்டர் மியாமி அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மெஸ்ஸி அந்த அணி சார்பில் இதுவரை 92 போட்டிகளில் ஆடி 81 கோல்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் போர்த்துக்கல் நட்சத்திரமான ரொனால்டோ 2024 ஆம் ஆண்டிலேயே 900 கோல்கள் மைல்கல்லை எட்டினார். அவர் தற்போது 965 கோல்களை பெற்றிருப்பதோடு தனது ஓய்வுக்கு முன்னர் 1,000 கோல்கள் மைல்கல்லை எட்டும் முயற்சியில் உள்ளார்.

இந்த வரிசையில் பிரேஸிலின் பீலே 765 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். தற்போது ஆடிவரும் வீரர்களில் ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்து பார்சிலோனாவின் ரொபர்ட் லொவன்டோஸ்கி 690 கோல்களுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.