2026 பிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் போட்டிகளை அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு மாற்ற விடுத்த கோரிக்கையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படியே போட்டிகள் நடைபெறும் என்று அது தெரிவித்துள்ளது.
‘2026 பிஃபா உலகக் கிண்ணத்திற்கு திட்டமிடும்போது பிஃபா ஈரான் உட்பட பங்கேற்கும் அனைத்து நாடுகளுடனும் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தது’ என்று அது வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘2025 டிசம்பர் 6 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணைக்கு அமைய அனைத்து அணிகளும் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது போர் தொடுத்தது தொடக்கம் உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஈரானை தனது நாட்டுக்கு வரவேற்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் குறிப்பிட்டபோதும், ‘அவர்களுடைய உயிருக்கும் பாதுகாப்புக்கும் அவர்கள் இங்கு இருப்பது பொருத்தமானது என்று நான் நம்பவில்லை’ என்றும் தெரிவித்திருந்தார்.
டிரம்பின் இந்த கருத்துக்கு பதில் அளித்த ஈரான் கால்பந்து அணி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘உலகக் கிண்ணத்தில் இருந்து ஈரானிய தேசிய அணியை யாராலும் வெளியேற்ற முடியாது’ என்றது. எனினும் ஈரானிய தேசிய அணியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாதபோது ஈரான் அணி நிச்சயம் அமெரிக்காவுக்கு பயணிக்காது என்று ஈரான் கால்பந்து சம்மேளனத் தலைவர் மஹ்தி தாஜ் கடந்த திங்களன்று குறிப்பிட்டிருந்தார்.
2026 பிஃபா உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன் 11 தொடக்கம் ஜூலை 19 ஆம் திகதி வரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் இடம்பெறவுள்ளன. இதில் ஈரான் அணி ஆரம்ப சுற்றுக்காக லொஸ் ஏஞ்சல்ஸில் நியூசிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளையும் சியாட்டலில் எகிப்து அணியையும் எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.


