அமெரிக்காவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் இல்லை

m13

2026 பிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் ஈரான் பங்கேற்கும் நிலையில் இல்லை என்று அந்நாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அஹமது தொன்யாமாலி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் எதிர்வரும் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் அணி ஆரம்ப சுற்றில் ஜி குழுவில் மூன்று போட்டிகளில் ஆடவுள்ளது. இதன்படி அந்த அணி நியூசிலாந்து மற்றும் பெல்ஜியத்தை லொஸ் ஏஞ்சல்ஸில் முறையே ஜூன் 15 மற்றும் 21 ஆம் திகதிகளில் எதிர்கொள்ளவிருப்பதோடு தொடர்ந்து ஜூன் 26 இல் சியாட்டலில் எகிப்து அணியுடன் மோதவுள்ளது.

எனினும் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திவரும் தாக்குதல்களில் அந்நாட்டு உயர்மட்ட தலைவர் ஆயதொல்லா கமனேவும் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சூழலில் அந்த அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம் வலுத்து வந்தது.

இந்நிலையில் உலகக் கிண்ணத்தில் ஈரான் பங்கேற்பது வரவேற்கப்படும் என்று அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிடம் கூறியதாக பிஃபா தலைவர் கியானி இன்பன்டினோ கடந்த புதனன்று (11) குறிப்பிட்டிருந்தார்.

எனினும் ஈரான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தொன்யாமாலி கூறியதாவது, ‘இந்த ஊழல் நிறைந்த அரசாங்கம் எங்கள் தலைவரைப் படுகொலை செய்துள்ளதால், எந்த சூழ்நிலையிலும் உலகக் கிண்ணத்தில் பங்கேற்க எங்களுக்கு பொருத்தமான நிலைமை இல்லை. எமது வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதோடு பங்கேற்கும் நிலைமை தற்போது இல்லை’ என்றார்.

ஈரான் இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு முதல் அணியாகவே தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.