டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்தியாவுக்கு 131 கோடி ரூபா பரிசு

m11

டி20 உலகக் கிண்ணத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்ற இந்திய அணிக்கு அந்நாட்டு நாணயப்படி 131 கோடி ரூபா பணப்பரிசை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

‘மீண்டும் ஒருமுறை வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு சபை வாழ்த்துத் தெரிவிப்பதோடு எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற பாராட்டுகளைத் தெரித்துக்கொள்கிறது’ என்று இந்திய சபை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அஹமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வென்றது. இதற்காக இந்திய அணிக்கு மூன்று மில்லியன் டொலர் பரிசுத் தொகை கிடைத்தது.

எனினும் இந்தப் பரிசுத் தொகையை விடவும் அதிக பரிசை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர், அணி ஊழியர்கள், தேர்வாளர் குழுவைச் சேர்ந்தவர் மற்றும் இதர உதவியாளர்கள் என அனைவருக்கும் சேர்த்து 131 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்கப்படும் என்று இந்திய சபை செயலளார் தேவஜித் சைகியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ண தொடரை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபா பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் தற்சமயம் அதனை விடவும் 6 கோடி ரூபா அதிகமான பரிசுத் தொகையை வழங்குவதாக சபை குறிப்பிட்டுள்ளது. மேலும் இது ஐ.சி.சி. அறிவித்திருக்கும் பரிசுத் தொகையை விடவும் 104 கோடி ரூபா அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.