– சில பகுதிகளில் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்
– பொதுமக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்கவும்
இன்றையதினம் (10) நாட்டின் வட மாகாணத்திலும் திருகோணமலை, அநுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், மொணராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் குறைப்தோடு, போதியளவில் நீரை உள்ளெடுத்தல் உள்ளிட்ட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடல் பகுதிகளில்
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில், அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு திசைகளில் வீசக் கூடும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று மாறுபட்ட திசைகளில் வீசக் கூடும்.
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
கடல் நிலை:
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.


