இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேர்ஸ்டன் நியமனம்

dailynews650 35

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ​ெகரி கேர்ஸ்டன் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி தொடக்கம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்க அணிக்காக 101 டெஸ்ட் மற்றும் 185 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் 58 வயதான கேர்ஸ்டன் 2008 தொடக்கம் 2011 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் 2011 தொடக்கம் 2013 வரை தென்னாபிரிக்க அணியில் தலைமை பயிற்சியாளராகவும் செயற்பட்டுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2011 உலகக் கிண்ணத்தை வென்றதோடு 2013 இல் தென்னாபிரிக்க அணி அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கேர்ஸ்டன் கடைசியாக 2026 டி20 உலகக் கிண்ணத்தில் நமீபிய அணியின் ஆலோசகராக செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில் 2028 ஏப்ரல் 14 ஆம் திகதி வரை இரண்டு ஆண்டு கால ஒப்பந்தமாகவே அவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக 2027 ஐ.சி.சி. உலகக் கிண்ணத்திற்கு இலங்கை அணியை தயார் படுத்துவதே அவரின் பிரதான பணியாக உள்ளது. அந்த உலகக் கிண்ணம் தென்னாபிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வேயில் நடைபெறவுள்ளது.

நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சோபிக்காத நிலையில் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். இலங்கை கிரிக்கெட் சபையுடனான அவரது ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் மாதமே காலாவதியாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி அடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆடவிருந்தபோதும் மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக அந்தத் தொடர் நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.