இத்தாலியில் நடைபெற்ற 25ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி அதிகாரபூர்வமாக கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது. போட்டியின் பதக்கப் பட்டியலில் நோர்வே முதலிடம் பிடித்தது.
இத்தாலியின் மிலான் மற்றும் கார்டினா நகரங்களில் கடந்த 6ஆம் திகதி ஆரம்பித்து 16 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், 92 நாடுகளில் இருந்து, 2,871 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் 1,533 வீரர்களும், 1,338 வீராங்கனைகளும் அடங்குவர்.
மொத்தம் 8 விளையாட்டுகளில் 116 பிரிவுகளில் பந்தயங்கள் நடைபெற்றன. இதன் முடிவில், நோர்வே 18 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தமாக 41 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. அமெரிக்கா 33 பதக்கங்களுடன் இரண்டாம் இடமும், நெதர்லாந்து 20 பதக்கங்களுடன் மூன்றாம் இடமும் பிடித்தன.
போட்டியை நடத்திய இத்தாலி 10 தங்கம், 6 வெள்ளி, 14 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 4ஆம் இடம் பெற்றது. பட்டியலில் மொத்தம் 29 நாடுகள் இடம் பிடித்தன. குறைந்தபட்சமாக பெல்ஜியம் ஒரேயொரு வெண்கலப் பதக்கத்துடன் கடைசி இடம் பிடித்தது. இந்நிலையில் கடைசி நாளான திங்கட்கிழமை, வடக்கு இத்தாலியில் உள்ள வெரோனா அரினாவில் ஒலிம்பிக் போட்டியானது பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி (2030) நடைபெறவுள்ள பிரான்ஸிடம் ஒலிம்பிக் போட்டிக்கான கொடி ஒப்படைக்கப்பட்டது.


