டி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் குழு 2 இல் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் அணியை தீர்மானிப்பதில் முக்கியமான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குழு 2 இல் இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதியை உறுதி செய்திருப்பதோடு இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்ப தொடர்ந்து உள்ளது. தற்போது சுப்பர் 8 புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்துக்கு அடுத்து (4 புள்ளிகள்) நியூசிலாந்து 3 புள்ளிகளுடனும் பாகிஸ்தான் ஒரு புள்ளியுடனும் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அது அரையிறுதிக்கு முன்னேறும் என்பதோடு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும். எனினும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். பாகிஸ்தான் அணி நாளை (28) தனது கடைசி சுப்பர் 8 போட்டியில் இலங்கை அணியை பல்லேகலவில் எதிர்கொள்ளவுள்ளது. இதன்போது இலங்கை அணியை தோற்கடித்து ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்தள்ளில் அரையிறுதிக்கு முன்னேற பாக். அணிக்கு வாய்ப்பு ஏற்படும். எவ்வாறாயினும் அந்த வாய்ப்பு சற்று கடினமாகவே அமையும்.
இதன்படி இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் 180 ஓட்டங்களைப் பெறும் பட்சத்தில் நியூசிலாந்தை 30 ஓட்டங்களால் வீழ்த்தினால், பாகிஸ்தான் அணியும் இதே வெற்றி இலக்கை நிர்ணயித்தால் இலங்கைக்கு எதிராக 40 ஓட்டங்களால் வெற்றிபெற வேண்டி ஏற்படும். அதேபோன்று இங்கிலாந்தின் வெற்றி என்பது குறுகிய வித்தியாசத்தில் இருக்கும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானின் வெற்றி அதிக இடைவெளியில் இருந்தாலேயே அந்த அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியுமாக இருக்கும்.


