மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.
எனினும் ஏற்கனவே இலங்கை அணி முதல் இரு போட்டிகளையும் வென்ற நிலையில் தொடரை 2–1 என கைப்பற்றியது.
கிரனடா, சென் ஜோர்ஜஸில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது. ஹர்ஷிதா சமரவிக்ரம 112 பந்துகளுக்கு 70 ஓட்டங்களைப் பெற்றார்.
எனினும் பதிலெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகளுக்கு ஆரம்ப விராங்கனையாக வந்த அணித் தலைவி ஹேலி மத்தியூஸ் 119 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்று அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் மேற்கிந்திய மகளிர் அணி 46 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை (28) சென் ஜோர்ஜஸில் நடைபெறவுள்ளது.


