வாழ்வா சாவா போட்டியில் இலங்கை இன்று நியூசிலாந்துடன் பலப்பரீட்சை

feb25

துடுப்பாட்டத்தில் அதிரடி மாற்றங்கள் செய்ய வாய்ப்பு

டி20 உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்துக்கு எதிரான சுப்பர் 8 சுற்றின் வாழ்வா சாவா போட்டியில் இலங்கை அணி இன்று (24) களமிறங்கவுள்ளது. கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டி இலங்கை அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைப்பதற்கு கட்டாயமாகும்.

சுப்பர் 8 சுற்றில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் குழு 2 புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் இருப்பதோடு நெட் ரன் ரேட்டிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அணி இன்றைய போட்டியில் தோல்வியை சந்தித்தால் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும்.

மறுபுறம் நியூசிலாந்து அணியின் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சுப்பர் 8 சுற்றுப் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இன்றைய தினத்தில் அந்த அணிக்கும் வெற்றி கட்டாயமாக உள்ளது. நியூசிலாந்து தற்போது ஒரு புள்ளியை பெற்றுள்ளது.

பல்லேகலவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 147 ஓட்ட வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 95 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்நிலையில் அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்துடனேயே இலங்கை அணி இன்று களமிறங்குகிறது. குறிப்பாக பத்து நிசங்கவுடன் ஆரம்ப ஜோடியாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் கமில் மிஷார இருவருமே சோபிக்கத் தவறி வருகின்றனர். இது கடந்த போட்டியில் துடுப்பாட்ட வரிசையில் பெரும் தாக்கத்தை செலுத்துவதாக இருந்தது.

இந்நிலையில் இன்று துடுப்பாட்ட வரிசையில் அதிரடி மாற்றங்கள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இதுவரை போட்டிகளில் ஆடாமல் இருக்கும் சரித் அசலங்க இன்றைய தினத்தில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் அணியில் இடம்பெறும் பட்சத்தில் குசல் மெண்டிஸ் ஆரம்ப வீரராக வரக்கூடும்.

ஏற்கனவே இலங்கை அணியில் மூன்று முன்னணி பந்துவீச்சாளர்கள் உபாதைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் பந்துவீச்சு வரிசை பலவீனமாக உள்ளது. குறிப்பாக வனிந்து ஹசரங்கவுக்கு பதில் களமிறங்கிய துஷான் ஹேமன்த கடந்த போட்டியில் சோபிக்காத நிலையில் பந்து வீச்சு வரிசையிலும் மாற்றங்கள் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

நியூசிலாந்து அணி ஆரம்ப சுற்றில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு அதன் துடுப்பாட்ட வரிசையும் வலுவாக உள்ளது. அந்த அணியை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் தயார் நிலையில் இருந்தாலேயே இன்றைய போட்டியை வெல்ல முடியுமாக இருக்கும்.

இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 28 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியபோதும் அதில் 9 இல் மாத்திரமே வெல்ல முடிந்திருப்பதோடு 16 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது. சொந்த மண்ணிலும் இலங்கை அணி நியூசிலாந்திடம் வெற்றியை விட தோல்வியையே அதிகம் பெற்றுள்ளது. இங்கு நியூசிலாந்தை எதிர்கொண்ட 10 போட்டிகளில் 5 இல் தோற்று 3 இலேயே வென்றுள்ளது.