இடது பின் தொடை பகுதியில் உபாதைக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க டி20 உலகக் கிண்ண போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின்போது ஹசரங்கவின் உபாதை மோசமடைந்த நிலையில், பல வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அடுத்து டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் பிரதான பந்துவீச்சாளராக இருக்கும் ஹசரங்க அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களுக்கும் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் உபாதை காரணமாக அவர் சிரமத்துக்கு மத்தியிலேயே பந்து வீசினார். இதனை அடுத்து ஸ்கேன் சோதனை செய்து கொண்ட நிலையிலேயே அவரது காயம் மோசமாக உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹசரங்க மூன்று ஆண்டுகளுக்கு முன் இடது காலில் சத்திரசிகிச்சை செய்து கொண்டதோடு அதன் காரணமாக அவரால் 2023 உலகக் கிண்ணத்திலும் ஆட முடியாமல் போனது. அது தொடக்கம் அவர் தொடர்ச்சியாக உபாதைகளுக்கு உள்ளாகி வருகிறார்.
இந்நிலையில் ஹசரங்கவுக்கு பதில் இலங்கை அணியில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான துஷ்மன்த ஹேமன்த இணைக்கப்படவுள்ளார். எனினும் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இலங்கை அணி டி20 உலகக் கிண்ணத்தில் பி குழுவுக்கான தனது இரண்டாவது போட்டியில் நாளை (12) ஓமான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.


