சம்பிரதாய மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதில் தடை ஏதும் இல்லை

f111

மீன் வளங்களை பாதுகாத்து வாழ்வாதாரம் வழங்குவதே நோக்கம்

சம்பிரதாய மீன்பிடித்தொழிலை மேற்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என்றும் அதற்கு மாறான முறைமையை மேற்கொள்வதிலேயே பிரச்சனை காணப்படுவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.போராட்டங்களில் ஈடுபட்டுள்ள கரைவலை மீனவர்கள், ஏனைய மீனவர்களையும் கவனத்திற் கொள்வது அவசியம் என்றும் எவ்வாறாயினும் மீன் வளங்களை பாதுகாத்து இந்த தொழிலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

டிரக்டர் மற்றும் வின்ச் இயந்திரங்களை உபயோகிப்பது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சம்பிரதாயபூர்வமான பின்புலத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மீனவர்கள் விஞ்ச் இயந்திரங்களை டிரக்டர்களில் பொருத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனைக்கு தீர்வு என்ன என, ஊடகவியலாளர் ஒருவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.அந்த வகையில் கரை வலை மீன் பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஏழாவது நாளாகவும் சத்தியாகிரகப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான தீர்வை வழங்கும் என்றும் அவர் கேள்வி யெழுப்பினார்.இந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர்,

மீன்பிடி தொழில்துறையில் மீன் பிடிப்பதற்கான பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. அவற்றில் சில சம்பிரதாய முறைகள். மேலும் சில தொழில் நுட்பங்களை உபயோகித்து மேற்கொள்ளப்படும் முறைகள் என்பவை பிரதானமானவை. எனினும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது.சம்பிரதாய முறைமையாக இருக்கட்டும் அல்லது தொழில்நுட்ப ரீதியிலான முறைமையாக இருக்கட்டும் இறுதியில் எமது நாட்டு மக்களுக்கு மீன்களை பெற்றுக் கொடுப்பது அவசியம். அத்துடன் கடலில் மீன் வளங்களை பாதுகாப்பதும் முக்கியமாகிறது.அந்த வகையில் மீன்கள் உற்பத்தியாகும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்துகின்ற மீன் பிடித் தொழில் துறையை முன்னெடுக்க முடியாது. கரை வலை மீன் பிடி தொடர்பில் கூறும்போது, மீன் பிடி படகுகளின் உதவியோடு ஒரு முறைமை பின்பற்றப்படுகிறது. அதன் மூலம் இலங்கையில் 898 மீன் பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் 145 மீன் பாடு, யாழ்ப்பாணத்தில் 144 பாடு, மட்டக்களப்பில் 109 பாடு, மன்னாரில் 115 பாடு, நீர் கொழும்பில் 15 பாடு, களுத்துறையில் 24 பாடு, காலியில் 30 மீன்பாடு என 898 கரைவலை மீன் பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 750 மீன் பாடுகளே தற்போது நடைமுறையில் உள்ளன.இந்த கரை வலை மீன் பிடி தொழில் புதிய ஒனறல்ல. அது பரம்பரையாக முன்னெடுத்து வரும் தொழிலாகும். அது தொடர்ச்சியாக பரம்பரை பரம்பரையாக முன்னெடுக்கப்படும் ஒன்று.

இந்த சம்பிரதாய மீன்பிடி முறைமையில் உள்ள முக்கிய விடயம் மீன்வளங்களை பாதுகாத்து தொழில் செய்வதாகும். அதற்காக அவர்கள் பல்வேறு நடைமுறைகளை உருவாக்கியுள்ளனர். அதன் உரிமையை அவர்கள் எப்போதும் வைத்துக் கொண்டுள்ளனர்.இதுதான் கரைவலை மீன் பிடி தொழிலின் அடிப்படை.இந்த கரைவலை மீன்பிடி தொழிலுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இயந்திரங்களைப் பொருத்தி மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது பதவியில் இருந்த கடற்தொழில் அமைச்சர் மற்றும் கடற்தொழில் பிரதியமைச்சர் என இருவரும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் அமைச்சர் 72 பேருக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் பிரதியமைச்ச,ர் அதனை 183 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன் வைத்துள்ளார். எவ்வாறெனினும் இது அரசியல் ரீதியான தீர்மானம் அல்ல.மீன் வளங்களைப் பாதுகாப்பதென்றால் விஞ்ஞான ரீதியான பிரவேசம் அவசியம். மீன்பிடித் தொழிலின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு கடற்றொழில் அமைச்சுடன் சம்பந்தப்பட்ட நாரா என்ற நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனமே அவை தொடர்பில் விஞ்ஞான ரீதியாக விசாரணைகள் மேற்கொள்ளும்.