சபையில் கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய
ஆறாம் தர ஆங்கில பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை வைத்து புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்று(06) தெரிவித்தார்.
தரம் 06 ஆங்கில பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் யார் தவறிழைத்தது, அதன் நோக்கம் என்ன என்பதும் விசாரணைகளின் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்றும், எந்த வகையிலும் இந்த பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். தேசிய கல்வி நிறுவனம் பிறிதொரு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சால் அதிகாரத்தை பிரயோகிக்க முடியாது. அந்த நிறுவனத்தின் ஆணைக்குழு ஊடாக இந்த பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது. இடம்பெற்ற தவறு தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைகளின் பின்னர் அது பகிரங்கப்படுத்தப்படும். இந்த பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. ஆகவே தவறான அச்சத்தையும், நிலைப்பாட்டையும் மக்கள் மத்தியில் தோற்றுவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


