வியாபார பண்ட அறவீட்டுச் சட்டமானது நுகர்வோருக்கு மாத்திரமல்ல உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் மிகுந்த பயனை அளிக்கக் கூடியதாகும் என தெரிவித்த கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் எதிர்வரும் காலங்களில் மக்களின் உணவுத் தேவையை வளப்படுத்தி உறுதி செய்ய இச்சட்டம் துணை புரியும் என்றும் தெரிவித்தார்.
நேற்று (22) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த அரசாங்கத்தில் ஒரு முறையற்ற விதத்தில் உணவுப் பண்டங்களை இறக்குமதி செய்தமையால் சீனி மோசடி போன்ற பல்வேறுபட்ட மோசடிகள் இடம்பெற்றதை நாங்கள் எல்லோரும் நன்கு அறிவோம். எனவே இந்தச் சட்டத்தின் மூலம் இனிமேல் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதை தடுக்கலாம்.
விசேடமாக வெங்காயம், பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் வரிவிதிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதால் நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் கிடைக்கும். நுகர்வோர் மீது சுமையை திணித்து இறக்குமதியாளர்கள் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டு வாழ்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது. இனி வரும் காலங்களில் மக்கள் நேர்மையான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பண்டங்களை நியாயமான விலையில் அன்றாட வாழ்வின் தேவைகளுக்காக சந்தைகளிலே இலகுவாக பெற்றுக் கொள்வார்கள்.
இந்தச் சட்டம் மூலம் அமைச்சருக்கு விரைவான முடிவு எடுக்கின்ற திறனைக் கொண்டிருப்பதால் உலக சந்தைகளில் தேவையான உணவுகளை உடனடியாக இறக்குமதி செய்து கொள்ள முடியும். அதேவேளையில் அரசாங்கத்திற்கு தேவையான சந்தர்ப்பத்தில் வரிகளில் குறித்த மாற்றத்தைக் கொண்டு வர முடியும். விசேடமாக குறித்த உணவுப் பொருட்களுக்கான அடையாளம் வர்த்தகமானியில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் குறிப்பாக உள்ளூர் விசாய உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படுவதோடு அவர்களுடைய உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கடந்த காலங்களில் அதிகளவு இறக்குமதிகள் செய்யப்பட்டு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரியளவு பாதிக்கப்பட்டதை நாம் எல்லோரும் அறிவோம். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு, பாதுகாப்பு என்பன அதிகரிக்கப்படும். அதேவேளையில் கடந்த காலங்களில் இறக்குமதியாளர்கள் பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தார்கள். இந்தச் சட்டத்தின் மூலம் இறக்குமதியாளர்கள் இலகுவான முறையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் திறந்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டுப்பாட்டு ஒழுங்கு விதி இறக்குமதித் துறையில் பேணப்படும். இதன் மூலம் பாரிய நன்மைகளை நுகர்வோர் அடைவார்கள். ஒருங்கிணைந்த ஒரு வரிவிதிப்பின்படி இவை முன்னெடுக்கப்படும். குறித்த பொருட்களுக்கு ஏற்ப வரியினைச் செலுத்தி விட்டு மிக இலகுவாக இறக்குமதிப் பொருட்களை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். பெரியளவில் நிர்வாகச் சிக்கல் இருக்கப் போவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப உற்பத்திகளைப் பொருட்களைக் கருத்திற் கொண்டுதான் இறக்குமதி செய்வதற்காக அனுமதிகள் வழங்கப்படும்.
எனவே அரசாங்கம் மக்களது உண்மையான தேவையை அறிந்து நுகர்வோர்களுக்குரிய உணவுப் பண்டங்களை இறக்குமதி செய்யும் விடயத்தில் பரிசீலனை செய்து ஒருங்கிணைந்த சட்டத்தின் மூலம் மக்களுக்கு அன்றாட உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்கு இந்த பெறுமதியான வியாபார பண்ட வரிச் சட்டம் எதிர்வரும் காலங்களில் மக்களின் உணவுத் தேவையை வளப்படுத்தி உறுதி செய்ய துணை புரியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


