சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான ‘சியட்’ விருதை வென்றார் ஜயசூரிய

24.2 2

இலங்கை டெஸ்ட் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜயசூரிய இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற 27 ஆவது சியட் கிரிக்கெட் விருது விழாவில் ‘ஆண்டின் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளராக’ விருது வென்றுள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற இந்த விருது விழாவில் கடந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் திறமையை வெளிப்படுத்தியதற்காகவே ஜயசூரிய இந்த விருதை வென்றார். சரியான மற்றும் நிலையான பந்துவீச்சு மற்றும் ஆட்டத்தை திசை திருப்பும் திறன் அடிப்படையிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபாத் ஜயசூரிய கடந்த ஆண்டு ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஆடி 48 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 32.20 பந்துவீச்சு சராசரியை பெற்றிருந்தார். இந்தக் காலத்தில் அவர் 4 தடவைகள் 5 விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேல் வீழ்த்தி இருந்தார். இலங்கை டெஸ்ட் அணியின் நிரந்தர பந்துவீச்சாளராக உள்ள 33 வயது பிரபாத் ஜயசூரிய இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 122 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபல சியட் விருது விழாவில் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் வென்றதோடு வாழ்நாள் சாதனையாளர் விருதை மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாரா மற்றும் இந்திய முன்னாள் வீரர் பி.எஸ். சந்திரசேகர் பெற்றனர். இதில் பெரும்பாலான விருதுளை இந்திய வீரர்களே வென்றதோடு ஆண்டின் சிறந்த டி20 துடுப்பாட்ட வீரராக சுஞ்சு சம்சனும் பந்துவீச்சாளராக வருன் சக்ரவர்த்தியும் தெரிவானதோடு ஒருநாள் துடுப்பாட்ட வீரருக்கான விருதை நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் பெற்றார்.