ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் நேற்று நடந்த துர்க்மனிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை கால்பந்து அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் வரலாற்று வெற்றியை பெற்றது.
கொழும்பு, குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நேற்று (09) நடைபெற்ற போட்டியில் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்த நிலையில் இரண்டாவது பாதியில் 66 ஆவது நிமிடத்தில் வைத்து எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமித்த லியோன் பெரேரா கோல் புகுத்தினார் இதன்மூலம் 1 – 0 என முன்னிலை பெற்ற இலங்கை அணி அதனை வெற்றி கோலாக மாற்றியது. துர்க்மனிஸ்தான் அணிக்கு எதிராக இதுவரை 6 முறை போட்டியிட்டிருக்கும் இலங்கை அணி அந்த அணிக்கு எதிராக பெறும் முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் துர்க்மனிஸ்தான் அணிக்கு எதிராக ஐந்து போட்டிகளை தோற்றிருக்கும் இலங்கை ஒரு போட்டியை சமநிலை செய்தது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தரவரிசையில் துர்மனிஸ்தான் 138 ஆவது இடத்தில் இருப்பதோடு இலங்கை அணி 197 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் இலங்கை அணி 2027 சவூதிய அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவதற்காக வாய்ப்பையும் அதிகரித்துக்கு கொண்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அணி எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி துர்க்மனிஸ்தானை அதன் சொந்த மைதானத்தில் மீண்டும் எதிர்கொள்ளவுள்ளது.


