உலகக் கிண்ணத்தில் ஈரான் ஆடுவதில் பிஃபா நம்பிக்கை

a2

ஈரான் தனது உலகக் கிண்ண போட்டிகளை அமெரிக்காவில் ஆடும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானி இன்பன்டீனோ உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் தனது அனைத்து ஆரம்ப சுற்றுப் போட்டிகளையும் அமெரிக்காவிலேயே ஆடவுள்ளது. எனினும் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் சூழலில் ஈரானின் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து பிஃபாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஈரான் குறிப்பிட்டிருந்தது.

தேவைப்பட்டால் ஈரானின் போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளோடியா ஷெய்போம் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் ‘போட்டிகள் அட்டவணையின்படியே நடத்தப்படும்’ என்று இன்பன்டீனோ கடந்த செவ்வாயன்று கூறியிருந்தார். கொஸ்டரிக்காவுக்கு எதிராக நேற்று முன்தினம் துருக்கியில் நடந்த ஈரானின் நட்புறவுப் போட்டியின்போதே இன்பன்டீனோ இதனைத் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் ஈரான் அணி 5–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. ‘ஈரான் உலகக் கிண்ணத்தில் ஆடும்… அதனாலேயே நாம் இங்கு வந்துள்ளோம்’ என்று இன்பன்டீனோ ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.