கோலூன்றிப் பாய்தலில் பத்து ஆண்டு சாதனையை முறியடித்தார் அபிஷாலினி

a3

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பரந்தாமன் அபிஷாலினி இளையோர் தேசிய சாதனையை கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் முறியடித்துள்ளார்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 2026 ஆசிய இளையோர் தடகள சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகளிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தெரிவுப் போட்டியின் முதல் நாளான நேற்று முன்தினம் அபிஷாலினி 3.50 மீற்றர் உயரம் பாய்ந்து முதல் இடத்தைப் பிடித்தார்.

இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு அனித்தா ஜெகதீஸ்வரனால் நிலைநாட்டப்பட்ட 3.41 மீற்றர் உயரமே சாதனையாக இருந்தது. ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர் அதே யாழ்ப்பாண மண்ணைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் இச்சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபிஷாலினிக்கு பயிற்சி அளிக்கும் கான்தீபன் கோபாலன் இலங்கையில் உள்ள முன்னணி கோலின்றிப் பாய்தல் பயிற்சியாளராக இருப்பதோடு அவரது பயிற்சியின் கீழ் மூன்று பிரதான பிரிவுகளில் தேசிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோலூன்றிப் பாய்தலில் 5.18 மீற்றர் உயரம் பாய்ந்து ஆடவர் தேசிய சாதனை படைத்திருக்கும் அருந்தவராசா புவிதரன் மற்றும் 3.72 மீற்றர் பெண்களுக்கான தேசிய சாதனைக்கு உரிமை கொண்டாடும் நேசராசா தக்ஷிதா ஆகிய இருவருமே கோபாலனின் பயிற்சியின் கீழ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் 16.92 மீற்றர் தூரம் எறிந்து ஹெசார ஜயசிங்க 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதன்போது 2024 இல் ஜயவ ரன்ஹிந்த அல்விஸ் 16.69 மீற்றர் எறிந்து படைத்த சாதனையையே அவர் முறியடித்தார்.

எனினும் ஆசிய கனிஷ்ட சம்பியன்சிப் போட்டிக்கான தகுதி மட்டமாக இருக்கும் 18.00 மீற்றர் தூரத்தை எட்ட அவர் தவறியுள்ளார்.