திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது “Meditations: The Reflections of His Holiness the Dalai Lama” என்ற ஒலிப்புத்தகத்திற்காக தனது முதல் கிராமி விருதை (Grammy Award) வென்றுள்ளார்.
இந்த விருது, சீனா அவரை ஒரு ‘பிரிவினைவாதி’ என்று சித்தரிக்கும் பிரச்சாரத்திற்கு எதிராக, உலக அரங்கில் அவரது அறநெறி மற்றும் ஆன்மீக அதிகாரத்தை அங்கீகரிக்கும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது.சீன வெளியுறவுத்துறை அமைச்சு இந்த விருதைக் கடுமையாக விமர்சித்துள்ளது. “கலை விருதுகளை சீனாவுக்கு எதிரான அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதை” தாங்கள் எதிர்ப்பதாக பீஜிங் தெரிவித்துள்ளது.
தலாய் லாமாவின் வாரிசுத் தேர்வை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கிறது. இதற்காக, வெளிநாடுகளில் உள்ள திபெத்திய சமூகங்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் மீது ‘தார்மீக ரீதியான குற்றச்சாட்டுகளை’ சுமத்தி, அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விருது அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, தலாய் லாமாவை பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தும் வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. ரஷ்ய அரசு ஊடகமான RT மூலம் பரப்பப்பட்ட இந்தத் தகவல், சீன ஆதரவு ஊடகங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. இருப்பினும், பிரபல உண்மையைச் சரிபார்க்கும் கருவியான Grok AI, இதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக்கூறி இதை ‘பொய்’ என உறுதிப்படுத்தியுள்ளது.
இதுபோன்ற ‘பிம்பத்தைச் சிதைக்கும்’ தாக்குதல் இது முதன்முறையல்ல. 2023-ல் தர்மசாலாவில் நடந்த ஒரு நிகழ்வின் வீடியோவைச் சிதைத்து, அவர் தவறாக நடந்துகொண்டது போன்ற பிம்பத்தை சீன ஆதரவு இணையப் படையினர் (50 Cent Army) உருவாக்கினர். இது திபெத்திய பிரதிநிதிகள் அப்போதே மறுத்திருந்தனர்.
இந்தச் சம்பவங்கள் நவீன சர்வாதிகார ஆட்சிகள் கையாளும் ஒரு முக்கிய உத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.ஜனநாயக நாடுகள் தேர்தல்கள் மூலம் தங்களின் அதிகாரத்தைத் தக்கவைக்கின்றன. ஆனால், சீன கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள் தங்களின் அதிகாரத்தை ‘கட்டமைக்கப்பட்ட கதையாடல்கள்’ மூலமே தக்கவைக்கின்றன. தலாய் லாமா போன்ற ஒரு ஆன்மீகத் தலைவர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படும்போது, அது சீனாவின் அதிகாரப்பூர்வ பிரச்சாரத்திற்கு நேரடி சவாலாக அமைகிறது.கிராமி விருது போன்ற கலாச்சார கௌரவங்கள், சீனாவின் பிரச்சாரத்திற்கு மாறான ஒரு மாற்று அதிகார மையத்தை உலக அரங்கில் நிலைநிறுத்துகின்றன.


