பொலிஸை வீழ்த்தி சொலிட் கழகம் புள்ளிப்பட்டியலில் ஓர் இடம் ஏற்றம்

ma3

ஜாவா லேன்–சென் மேரிஸ் போட்டி சமநிலை

இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் சுப்பர் 8 சுற்றில் பொலிஸ் கழகத்தை வீழ்த்தி சொலிட் அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் கண்டதோடு சென் மேரிஸ் மற்றும் ஜாவா லேன் அணிகளுக்கு இடையிலான போட்டி கோலின்றி சமநிலை பெற்றது.

கொழும்பு, குதிரைப்பந்தய திடலில் நேற்று முன்தினம் (3) நடைபெற்ற போட்டியில் சுப்பர் எட்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்த அநுராதபுரம் சொலிட் மற்றும் பொலிஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய சொலிட் ஆரம்பத்திலேயே பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டபோதும் 20 ஆவது நிமிடத்தில் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்த முரித் டீன் ஜபேஷ் சொலிட் சார்பில் முதல் கோலை புகுத்தினார்.

எனினும் முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் ஜென் ரிவால்டோ தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் பொலிஸ் பதில் கோல் திருப்பியது. இந்நிலையில் முதல் பாதியின் மேலதிக நேரத்தில் வைத்து ஹென்ரி சிபுஸ் பெற்ற கோல் மூலம் சொலிட் அணியால் மீண்டும் முன்னிலை பெற முடிந்தது. இதேவேளை இரண்டாவது பாதியில் சொலிட் அணி மேலும் ஒரு கோலை புகுத்தியதன் மூலம் அந்த அணி போட்டியில் 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் அந்த அணி தனது புள்ளிகளை 6 ஆக அதிகரித்து புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டதோடு நியூ ஸ்டார் அணி 7 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 4 இல் தோற்று ஒன்றில் மாத்திரம் வென்றிருக்கும் பொலிஸ் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

மறுபுறம் யாழ்ப்பாணம் சென் மேரிஸ் மற்றும் ஜாவா லேன் அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இரு அணிகளினது கோல் முயற்சிகள் கடைசிவரை வெற்றி அளிக்காத நிலையில் போட்டி சமநிலையில் முடிந்தது. சென் மேரிஸ் வீரர் ரூபன் ராஜ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தது.