இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் இணக்கம்!

fe10

– புறக்கணிப்பு முடிவை மாற்றிய பாகிஸ்தான்

– ஜனாதிபதி அநுர குமார நன்றி தெரிவிப்பு

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) கொழும்பில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

குறித்த போட்டியைப் புறக்கணிப்பதாக முன்னதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசாங்கம், தற்போது அந்த முடிவை மீளப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்த பங்களாதேஷ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு தீர்மானித்திருந்தது. எனினும், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏனைய உறுப்பு நாடுகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, பல்தரப்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மீண்டும் போட்டியில் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் இந்தப் போட்டியில் விளையாடத் தவறியிருந்தால், அந்த அணி இரண்டு புள்ளிகளை இழந்திருப்பதுடன், கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியான இந்தியா-பாகிஸ்தான் மோதல் தடைப்பட்டு தொடருக்கும், போட்டி மூலமான வருமானத்திற்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும்.

பாகிஸ்தானின் இந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது ‘X’ கணக்கில் பதிவிட்டுள்ளதாவது,

“விளையாட்டு தொடர்வதை உறுதி செய்தமைக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புக்கு நன்றிகள். கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. 1996 உலகக் கிண்ணத்தின் போது ஏனைய நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கைக்கு வர மறுத்தபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை இலங்கை இன்னும் மறக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் கடந்த வாரம் கருத்துத் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் முடிவு எதுவாக இருந்தாலும் இந்திய அணி திட்டமிட்டபடி கொழும்புக்கு வரும் எனத் தெரிவித்திருந்தார். தற்போது ரி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, தனது உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்குகிறது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் உறவுகள் அண்மைய மாதங்களில் விரிசலடைந்துள்ள போதிலும், உலகக் கிண்ணத் தொடருக்காக நடுநிலை நாடான இலங்கையில் விளையாட இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.