உலகக் கிண்ணத்திற்கு முன் ஆறுதல் வெற்றிக்காக இலங்கை இன்று களத்தில்

feb3

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ள இலங்கை அணி உலகக் கிண்ணத்தை நெருங்கி இருக்கும் நிலையில் ஆறுதல் வெற்றி ஒன்றுக்காக இன்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் களமிறங்கவுள்ளது.

முதல் இரு போட்டிகளும் நடைபெற்ற அதே பல்லேகலவில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டிக்கு மழை இடையூறு செய்யும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அதற்கு ஏற்ப போட்டிக்கான திட்டத்தை வகுப்பது கட்டாயமாக உள்ளது.

இங்கு நடந்த முதல் இரு போட்டிகளிலுமே மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லுவிஸ் முறையிலேயே முடிவு தீர்மானிக்கப்பட்டது.

என்றபோதும் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்த பணிக்கப்பட்ட இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றபோதும் அதனை காத்துக்கொள்ள முடியாமல் போனது. இதில் பதிலெடுத்தாடிய இங்கிலாந்து இன்னிங்ஸின் பாதியில் மழை குறுக்கிட்டதால் வெற்றி இலக்கு 17 ஓவர்களில் 173 ஆக மாற்றப்பட்டது.

மழைபெய்ததால் ஆடுகளம் பந்துவீச்சுகள் கடினமாக இருந்தது இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்தது. எனவே, இன்றைய போட்டியில் நாணய சுழற்சி தீர்க்கமானதாக அமையும்.

அதிலும் உலகக் கிண்ணத்திற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் சூழலில் இன்றை போட்டியில் வெற்றியுடன் உலகக் கிண்ணத்தை ஆரம்பிப்பது இலங்கை அணிக்கு நம்பிக்கையை அதிகரிப்பதாக உள்ளது.

எனினும் இலங்கை அணி டி20 போட்டிகளில் தொடர்ந்து சோபிக்கத் தவறி வருவதோடு சொந்த மண்ணில் அந்த அணி தொடர்ச்சியாக நான்காவது தொடரில் தொடர் வெற்றி ஒன்றை பெற தவறி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அணி ஆடிய 41 டி20 சர்வதேச போட்டிகளில் 18 வெற்றிகளை பெற்றபோதும் அதிகப்படியாக 21 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

அதிலும் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 12 ஆண்டுகளில் முதல் வெற்றி ஒன்றை பெறுவதற்கு இலங்கை அணி போராடி வருகிறது. 2014 இல் ஓவலில் நடந்த டி20 போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி இதுவரை ஆடிய 10 டி20 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

எனவே, தொடரை இழந்தபோதும் இன்றை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடனேயே களமிறங்கவுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் அணியில் மாற்றங்கள் செய்யாது முழு பலத்துடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

மாலிங்க சந்தேகம்

தோள்பட்டையில் உபாதைக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்க எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின்போதே அவர் உபாதைக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து கண்டியில் இருந்து கொழும்பு திரும்பி இருக்கும் அவர் ஸ்கேன் சோதனை செய்யவிருந்தார். அவரது உபாதை தீவிரமாக இருந்தால் நான்கு தொடக்கம் ஆறு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டி ஏற்படும் என்று அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு ஏற்பட்டால் அவர் உலகக் கிண்ணத்தில் ஆட முடியாத நிலை ஏற்படக்கூடும்.