கூட்டுறவு விற்பனை நிலையங்களில் மாதாந்தம் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.அநுராதபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் தெரிவித்த அமைச்சர்; கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவுக்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான இந்த காப்புறுதி நுகர்வோருக்கு இலவசமாக வழங்கப்படும்.கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கே இந்த ஆயுள் காப்புறுதி வழங்கப்படும்.
கூட்டுறவு ஊழியர்களுக்குத் திருப்திகரமான சம்பளம் மற்றும் ஆயுள் காப்புறுதி உள்ளிட்ட வசதிகளை வழங்கி, கூட்டுறவுத்துறையை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் கூட்டுறவு இயக்கத்தை ‘திசைகாட்டி’யின் பாரிய மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு ‘கோப் சிட்டி’யை ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அத்துடன் நகரப் பகுதிகளில் பாரிய கோப் சிட்டிகளைப் பராமரித்துச் செல்வதற்குத் தேவையான கடன் தொகையை, குறைந்த வட்டியின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


