உலகக் கிண்ணத்தின் டிக்கெட் விற்பனை நிலையங்கள் திறப்பு

febr5

டி20 உலகக் கிண்ணத்தை பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை நிலையங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (03) தொடக்கம் திறக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திலுள்ள விற்பனை நிலையம் பெப்ரவரி 3 முதல் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும். கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் 1ஆம் இலக்க வாயிலில் அமைந்துள்ள விற்பனை நிலையம் பெப்ரவரி 4ஆம் திகதி முதலும், கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் 5ஆம் இலக்க வாயிலில் அமைந்துள்ள விற்பனை நிலையம் பெப்ரவரி 7ஆம் திகதி முதலும், போட்டிகள் நடைபெறாத நாட்களில் மாத்திரம் திறக்கப்படும்.

போட்டிகள் நடைபெறும் நாட்களில், ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்திற்கான டிக்கெட்டுகளை ஒருகொடவத்த விற்பனை நிலையத்திலும், பல்லேகல மைதானத்திற்கான டிக்கெட்டுகளை பலகொல்ல அபிதா மைதானத்திலுள்ள விற்பனை நிலையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். அனைத்து விற்பனை நிலையங்களும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும்.

உலகக் கிண்ணத்திற்கான டிக்கெட் விலை 1,000 ரூபா தொடக்கம் 10,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் கொள்வனவின் போது ஒரு நபர் இலங்கை அணி பங்குபெறும் போட்டிகளுக்கு அதிகபட்சமாக 4 டிக்கெட்டுகளையும், இலங்கை அணி பங்குபெறாத ஏனைய போட்டிகளுக்கு அதிகபட்சமாக 10 டிக்கெட்டுகளையும் இணையதளம் அல்லது நேரடி விற்பனை நிலையங்கள் ஊடாக வாங்க முடியும்.