கிரிக்கெட்டில் 73 புதிய விதி மாற்றங்கள் அறிமுகம்: ஒக்டோபர் 1இல் நடைமுறை

feb5

ஹிட் விக்கெட், துடுப்பு, ஓவர் த்ரோவில் முக்கிய விளக்கம்

கிரிக்கெட் விதிகளை நிர்ணயிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் புதிய விதி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் விதிகளில் புதிய பதிப்பிலேயே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2017 சட்டக் கோவையின் நான்காவது பதிப்பாகவே இந்த விதி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அனைத்தும் உள்ளடக்கப்படுகின்றவாறும், நவீன போட்டிக்கு பொருந்தும் வகையிலும் விதிகளை புதுப்பிப்பதை இலக்காகக் கொண்டே எம்.சி.சி. இந்த புதிய பதிப்பின் வரைவை செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கிரிக்கெட் விதிகளில் புதிதாக மொத்தம் 73 விதி மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதோடு இதில் மொழியில் மாற்றங்களும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நிறைவு செய்வதில் கண்டிப்பான விதி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

டெஸ்ட் போன்ற பல நாட்கள் நடைபெறும் போட்டிகளில், ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் வீழ்ந்தால், அந்த ஓவர் பாதியிலேயே நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் இனிமேல், விக்கெட் வீழ்ந்தாலும் அந்த ஓவர் முழுமையாக வீசப்பட வேண்டும். புதிய துடுப்பாட்ட வீரர் களத்திற்கு வந்து எஞ்சிய பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிட் விக்கெட் விதியில் உள்ள குழப்பத்தை தவிர்க்கும் வகையில் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துடுப்பாட்ட வீரர் பந்தை எதிர்கொண்ட பின் சமநிலையை பெற முயற்சிக்கும்போது துடுப்பாட்ட வீரர் விக்கெட் மீது விழுந்தால் ஹிட் விக்கெட் ஆட்டமிழப்பாக அமையும். புதிய மாற்றத்தில் பந்தை பெறுதல் என்ற சொல்லுக்கு எம்.சி.சி. தெளிவான வரையறையை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,

‘பந்தை எதிர்கொண்ட பின் துடுப்பாட்ட வீரர் தமது உடல் சமநிலையை முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை ‘பந்தை பெறுதல்’ தொடர்கிறது. துடுப்பாட்ட வீரர் துடுப்பெடுத்தாடியதன் காரணமாக சமநிலை இழந்து, சில அடிகள் தள்ளாடி நடந்து, பின்னர் விக்கெட்டுகளின் மீது விழுந்தால், அது அவர் பந்தை எதிர்கொள்ள எடுத்த நடவடிக்கையின் விளைவாகவே கருதப்படும். அந்த நேரத்தில் பந்து ஏற்கனவே தூரத்தில் சென்றிருந்தாலும், துடுப்பாட்ட வீரர் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தவர் ஆகவே கருதப்படுவார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று இதுவரை சிறுவர் கிரிக்கெட்டில் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த லேமினேட் செய்யப்பட்ட துடுப்புகள் (ஒன்றுக்கும் மேற்பட்ட மரத்துண்டுகளை இணைத்து செய்யப்படும் துடுப்புகள்), இனி பெரியவர்களுக்கான சாதாரண கிரிக்கெட் போட்டிகளிலும் அனுமதிக்கப்படும். துடுப்புகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஓவர் த்ரோ மற்றும் மிஸ்பீல்ட் ஆகியவற்றுக்கு இடையே இருந்த குழப்பங்களைத் தீர்க்க புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரன் அவுட் செய்யும் நோக்கில் விக்கெட்டை நோக்கி எறியப்படும் பந்துகள் மட்டுமே இனி ‘ஓவர் த்ரோ’ எனத் தெளிவாக வரையறுக்கப்படும்.

இது குறித்து எம்.சி.சி. விதிகளின் முகாமையார் ஃபிரேசர் ஸ்டீவர்ட் கூறுகையில், ‘கிரிக்கெட் வேகமாக மாறிவரும் ஒரு விளையாட்டு. 1787 ஆம் ஆண்டு முதல் நாங்கள் பாதுகாத்து வரும் இந்த விதிகள், நவீன காலத்திற்கு ஏற்பவும், உலகெங்கிலும் உள்ள அனைத்து நிலை வீரர்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்யவே இந்த மாற்றங்களைச் செய்துள்ளோம்’ என்றார்.