டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க பங்களாதேஷுக்கு நாளைவரை கெடு

janu20

டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் பங்கேற்பது குறித்து நாளை (21) இறுதி முடிவை எடுப்பதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

டாக்காவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு இந்தக் காலக்கெடுவை விதித்திருப்பதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பில் உலகக் கிண்ணத்தில் ஆட பங்களாதேஷ் விருப்பத்தை வெளியிட்டபோதும் இந்தியாவுக்கு வெளியில் தனது போட்டிகளை நடத்த மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. இதனால் போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கையே இதற்கு மாற்றாக இருக்கும் ஒரே மற்றொரு நாடாகும்.  பாதுகாப்பை காரணமாகக் கூறியே பங்களாதேஷ் அணி இந்தியா செல்ல மறுத்து வருகிறது. எனினும் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டில் ஐ.சி.சி. தொடர்ந்தும் உள்ளது.

சி குழுவில் இடம்பெற்றிருக்கும் பங்களாதேஷ் அணி தனது முதல் மூன்று குழுநிலைப் போட்டிகளையும் கொல்லகத்தாவிலும் நான்காவது போட்டியை மும்பையிலும் ஆடும் வகையிலேயே போட்டி அட்டவணை உள்ளது.

இந்நிலையில் தம்மை அயர்லாந்துக்கு பதில் பி குழுவுக்கு மாற்றும்படியே பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஐ.சி.சியை கோரியுள்ளது. இதன்மூலம் பங்களாதேஷுக்கு தனது குழுநிலை போட்டிகளை இலங்கையில் ஆட வாய்ப்புக் கிடைக்கும்.  எனினும் அதற்கு உடன்பாடு எட்டப்படவில்லை.  இதனால் பங்களாதேஷ் இறுதி முடிவு ஒன்றை எடுப்பதற்கு நாளை வரை காத்திருக்க ஐ.சி.சி. தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் இந்தியா வர மறுத்தால் அதற்கு பதில் மாற்று அணி ஒன்றை உலகக் கிண்ணத்தில் இணைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அது தரவரிசை அடிப்படையில் ஸ்கொட்லாந்துக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

டி20 உலகக் கிண்ணம் இலங்கை மற்றும் இந்தியாவில் எதிர்வரும் பெப்ரவரி 7 தொடக்கம் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.