நியூசிலாந்துக்கு இந்தியாவில் முதலாவது தொடர் வெற்றி

jan20

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் முதல் முறையாக இரு தரப்பு ஒருநாள் தொடர் ஒன்றை வென்றது.

இந்தோரில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணிக்கு டரில் மிட்சல் (137) மற்றும் கிளன் பிலிப்ஸ் (106) ஆகியோர் சதம் பெற்றதோடு இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 219 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலெடுத்தாடிய இந்திய அணிக்கு விராட் கொஹ்லி தனது 54 ஆவது சதமாக 124 ஓட்டங்களை பெற்றபோதும் வேறு எவரும் கைகொடுக்கவில்லை. இதனால் அந்த அணி 46 ஓவர்களில் 296 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

நியூசிலாந்து அணி இதற்கு முன்னர் இந்திய மண்ணில் ஏழு முறை இரு தரப்பு ஒருநாள் தொடரில் ஆடியபோதும் அதில் ஒன்றில் கூட வெல்லவில்லை.