ஜனாதிபதி தலைமையில் வடக்கில் இன்று பல்வேறு தேசிய திட்டங்கள்

1..15

இரண்டு நாள் பயணத்தில் பொங்கல் விழாக்களிலும் பங்கேற்பு

  • கொன்னையன் குடியிருப்பு காற்றாலைத் திட்டம் தேசிய
    மின் கட்டமைப்புடன் இணைப்பு
  • விவசாயிகள், கால்நடை உற்பத்தியாளர்களுக்கும் நஷ்ட ஈடுகள்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) வியாழக்கிழமை வட பகுதிக்கு பயணமாகவுள்ளார். பொங்கல் தினமான இன்று வியாழக்கிழமையும் நாளை வௌ்ளிக்கிழமையும் வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்யும் ஜனாதிபதி, பொங்கல் விழா உட்பட பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் அவர் சிறப்பு அதிதியாக பங்கேற்கவுள்ளார். இந்த தைப்பொங்கல் விழா, இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வேலணை, துறையூர், ஐயனார் தேவஸ்தான மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வையடுத்து தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கான இழப்பீடு ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளது.அத்துடன் இன்றைய தினம் காலை 10 மணிக்கு மன்னார் கொன்னையன் குடியிருப்பு காற்றாலைத் திட்டத்தை, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.இதன் பின்னர்,மதியம் 12.00 மணிக்கு மன்னார் சவுத் பார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு ஜனாதிபதி அடிக்கல் நடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில்,யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் விழா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் 31,318 வீடுகளை இந்த வருடத்தில் நிர்மாணிக்கவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நாளை 16 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் சாவகச்சேரியிலுள்ள வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ‘தமக்கான இடம் அழகிய வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் கீழ், இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இதனையடுத்து அங்கு பயனாளிகளுக்கு நிவாரண காசோலைகளும் கையளிக்கப்படவுள்ளது. அதேவேளை,போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய பிரச்சாரத்தின் வடக்கு மாகாண நிகழ்ச்சித்திட்டம் நாளை பிற்பகல் 2:00 மணிக்கு யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது