லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அச்சு ஊடகம் மற்றும் லேக் ஹவுஸ் டிஜிட்டல் ஊடக அனுசரணையில், விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் கமகேவின் ஆலோசனைக்கு அமைய, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சைக்கிளோட்ட நடுவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் ‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரி நாளை (16) காலை 9 மணிக்கு கொழும்பு, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் ஆரம்பமாகவுள்ளது.
‘லங்கா ரை’ சைக்கிளோட்டப் போட்டியின் முதல் தினத்தில் கண்டி சென்று, இரண்டாவது தினத்தில் அநுராபுரத்தில் பூர்த்தி செய்யப்படுவதோடு இறுதி நாளான டிசம்பர் 18 ஆம் திகதி புத்தளம் வீதி ஊடாக டொரின்டன் பிளேஸ் சுதந்திர சதுக்கத்திற்கு அருகே நிறைவடையவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் சிலதின் விபரம் வருமாறு:
இலங்கை விமானப் படை சைக்கிளோட்ட அணி
வளர்ந்து வரும் சைக்கிளோட்ட வீரரான தேஷான் தருஷவின் தலைமையில் களமிறங்கும் இலங்கை விமானப்படை சைக்கிளோட்ட அணியில் கடந்த ஆண்டு விமானப் படை சைக்கிளோட்ட சம்பியன் பட்டம் வென்ற நதீஷ ஏஷானும் இடம்பெற்றுள்ளார். பல வெற்றிகளையும் குவித்திருக்கும் விமானப் படை அணியில் அனுபவம் மிக்க வீரர்களான டேன் நுகேராவுடன் சமோத் சில்வா, சச்சின்த சந்திமால், புத்திக வர்ணகுலசூரிய, சஞ்சு திமன்த மற்றும் நிதுஷ் நிரன்த ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த கழகத்தின் தலைவராக எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க விக்ரமசிங்க, செயலாளராக குரூப் கெப்டன் சமில் ஹெட்டியாரச்சி, முகாமையாளராக ஏ.ஆர்.எஸ். பொன்சேகா ஆகியோர் செயற்படுகின்றனர்.
பைக்–பி அணி
மலைநாட்டைச் சேர்ந்த பைக்- பி அணி பல திறமையான வீரர்களுடன் லங்கா ரைட் போட்டியில் பங்கேற்கிறது. அணியின் தலைவராக செயற்படும் பி.ஜி. சுமித் நலிந்த விமானப் படை சைக்கிள் சவாரியில் பங்கேற்ற அனுபவம் மிக்கவராவார். அதேபோன்று அணியில் இடம்பெற்றிருக்கும் துறைராஜ் நியோரூஷன் விமானப் படை சைக்கிள் சவாரி, தேசிய விளையாட்டு விழா ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அதேபோன்று இந்த அணியில் உதேஷ் பெரேரா, சத்சர பெரேரா, ரொஷான் வாசல, பந்துல ஜயவர்தன மற்றும் ருவன் குமார ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அணியின் பயிற்சியாளராக ரஞ்சித் கருணாரத்ன செயற்படுவதோடு, முகாமையாளராக நொயெல் பத்தேவல உள்ளார்.

