‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

jan13

இலங்கையின் பிரதான சைக்கிளோட்டப் போட்டியாக முதல்முறை நடத்தப்படும் ‘லங்கா ரைட்’ சைக்கிள் சவாரியை எதிர்வரும் ஜனவரி 16 தொடக்கம் 18 ஆம் திகதி வரை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் சுமித் சாந்த தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் இந்த சைக்கிளோட்டப் போட்டியில் மொத்தம் 26 அணிகளைச் சேர்ந்த 153 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டிக்கு லேக் ஹவுஸ் நிறுவனம் உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை வழங்குகிறது. லங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் காப்புறுதி அனுசரணையை வழங்குகிறது.

லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ‘லங்கா சவாரி’ சைக்கிளோட்டப் போட்டியின் தொடர்ச்சியாகவே இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 21 ஆண்டுகளுக்குப் பின்னரே பிரமாண்டமான முறையில் சைக்கிளோட்டப் போட்டி ஒன்று இலங்கையில் நடத்தப்படவுள்ளது.

இந்தப் போட்டி குறித்து விளக்கும் ஊடக சந்திப்பு நேற்று (12) விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன், அமைச்சின் மேலதிக செயலாளர் சுமித் சாந்த, அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் திலும் தயாரத்ன மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் வெளியீட்டு முகாமையாளர் ஷான்த ஜயமஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய சுமித் சாந்த கூறியதாவது, “சைக்கிளோட்டப் போட்டிக்கு இலங்கையில் நீண்ட வரலாறு மற்றும் தனித்துவம் ஒன்று உள்ளது. ‘பலமான குடிமக்கள் வெற்றிகரமான மக்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. சைக்கிளோட்டப் போட்டியை இலங்கை மக்களிடையே பிரபலப்படுத்தி விளையாட்டு கலாசாரம் ஒன்றை நாட்டில் உருவாக்குவதே இந்தப் போட்டியின் நோக்கமாகும்.

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 23 வயதுக்கு உட்பட்ட வெற்றியாளர் ஒருவரும் இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படவுள்ளார். போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளன” என்று தெரிவித்தார்.

‘லங்கா ரைட்’ சைக்கிளோட்டப் போட்டி ஜனவரி 16 ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் ஆரம்பமாகவுள்ளது.

‘லங்கா ரைட்’ சைக்கிளோட்டப் போட்டியின் முதல் தினத்தில் கண்டி சென்று, இரண்டாவது தினத்தில் அநுராபுரத்தில் பூர்த்தி செய்யப்படுவதோடு இறுதி நாளான டிசம்பர் 18 ஆம் திகதி புத்தளம் வீதி ஊடாக டொரின்டன் பிளேஸ் சுதந்திர சதுக்கத்திற்கு அருகே நிறைவடையவுள்ளது. பரிசளிப்பு விழா 18ஆம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளருக்கு 6 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.