மொன்சூன் கோல்ப் கிண்ணத் தொடர்

janu13

அவியானா சிலோன் ஹோட்டல் குழுமத்தின் அனுசரணையுடன் இலங்கை விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் நான்காவது முறையாக ஏற்பாடு செய்த மொன்சூன் கோல்ப் கிண்ண தொடர் 2025 ஆண்கள் மற்றும் பெண்கள் திறந்த கோல்ஃப் போட்டி தொடர் நேற்று முன்தினம் (11) திருகோணமலை சீனாக்குடா விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில், இலங்கை விமானப்படை விமான நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் தம்மிக டயஸின் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போட்டித்தொடரில் ஈகிள்ஸ் மொன்சூன் கிண்ணத்திற்காக ஆண் மற்றும் பெண் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியிட்டனர்.

மொன்சூன் கிண்ணத்திற்கான ஆண்கள் பிரிவில் வின் கமாண்டர் (ஓய்வு பெற்ற) லக்மால் குணவர்தன வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்ததுடன் மகளிர் பிரிவில் வெற்றிக்கிண்ணத்தை பிரவீனா துனுவில பெற்றுக்கொண்டார். அதே தொடரில் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தினை வின் கமாண்டர் (ஓய்வு பெற்ற) நளீன் பெந்தர ஆராய்ச்சி பெற்றுக்கொண்டதுடன் மகளிர் பிரிவில் இரண்டாம் இடத்தை நிலு ஜயதில பெற்றுக் கொண்டார்.