மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் டேமியன் மார்டின் கோமா நிலையில் இருந்து மீண்டும் எழுந்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன் சுகவீனமுற்ற மார்டின் குயீன்ஸ்லாந்து வைத்தியசாலை ஒன்றில் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மார்டினின் குடும்பம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவரது நண்பரும் முன்னாள் வீரருமான அடம் கில்கிறிஸ்ட், ‘கடந்த 48 மணி நேரத்தில் நம்ப முடியாத நிகழ்வுகள் நடந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
‘அவர் கோமா நிலையில் இருந்து மீண்டு, விரைவாக குணமடைந்து வருகிறார். தற்போது அவரால் பேச முடிகிறது. சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அதிசயமானது. அவர் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெறுவார்’ என்றார்.
மூளைக்காய்ச்சல் என்பது மூளை மற்றும் முதுகுத் தண்டை சுற்றியுள்ள பாதுகாப்பு உறைகள் பாதிக்கப்படும் ஒரு தொற்று நோய் ஆகும்.
இது திடீரென பாதிப்பை ஏற்படுத்துவதோடு விரைவான சிகிச்சை அளிக்காவிட்டால் சில மணி நேரத்திலேயே மரணத்தை விளைவிக்கக் கூடியதாகும். 54 வயதான டேமியன் மார்டில் 1992 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணி சார்பில் 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


