மின்னொளி கிரிக்கெட்டுக்காக எஸ்.எஸ்.சி. மைதானம் தயார்

jan7

டி20 உலகக் கிண்ணத்தை ஒட்டி இரவு நேர போட்டிக்காக கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் மின் விளக்கு பொருத்தும் பணிகள் பூர்த்தியாகி இருப்பதோடு அங்கு பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் பொருளாளர் சுஜீவ கொடலியத்த தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிதியில் அமைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 1.8 பில்லியன் ரூபா செலவாகியுள்ளது. டி20 உலகக் கிண்ணத்தில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஐந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. தவிர ஆர். பிரேமதாச மற்றும் பல்லேகல சர்வதேச மைதானங்களிலும் உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த திட்டம் தொடர்பில் விளக்குவதற்கு அண்மையில் ஊடகவியலாளர்கள் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவது நீண்டகால திட்டமாக இருப்பதாக கொடலியத்த குறிப்பிட்டார். பகலிரவு டெஸ்ட் போட்டிகள் அண்மைக் காலத்தில் பிரபலமடைந்தபோதும் இலங்கையில் அவ்வாறான இளஞ்சிவப்பு நிறப் பந்து டெஸ்ட் போட்டி இதுவரை நடத்தப்படவில்லை.

விளக்குகள் பொருத்துவது மாத்திரமன்றி எஸ்.சி.சி. மைதானத்தின் புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உடைமாற்றும் அறைகள் மற்றும் புதிய விசேட பிரமுகர் பார்வையாளர் பகுதியும் மேம்படுத்தப்பட்டுள்ளன. உலகக் கிண்ணத்தின் பின்னர் இதன் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படுவதோடு, மைதானத்தின் இருக்கைகள் எண்ணிக்கை 30,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

125 ஆவது ஆண்டு நிறைவை கடந்த ஆண்டு கொண்டாடிய எஸ்.எஸ்.சி. மைதானத்திற்கு இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம் உள்ளது.