– 2,333,797 ஆவது பயணி வருகை; 2018 இற்கு பின் புதுப்பிக்கப்பட்ட சாதனை
ஒரு வருடத்தில் இலங்கைக்கு வருகை தந்த உச்ச சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கைக்கான புதிய சாதனை இன்று (29) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை வரலாற்றில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக 2018 ஆம் ஆண்டு 2,333,796 பேர் நாட்டுக்கு வருகை தந்திருந்தமை பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை இன்று தாண்டியதன் மூலம் புதிய வரலாற்றுச் சாதனை உருவாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில், 2025 ஆம் ஆண்டில் 2,333,797 ஆவது சுற்றுலாப் பயணியாக வந்த இந்திய நாட்டவரின் குடும்பத்தை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விசேட வரவேற்பளித்திருந்தது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL 162 விமானம் மூலம் இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் பீலிக்ஸ் பெஸ்லின் பெரேரா, ரீனா பெர்னாண்டஸ், அன் கிரிஸ்டினா பெரேரா ஆகியோரே இவ்வாறு இலங்கை வந்தவர்களாவர். நவம்பர் மாத இறுதியில் நாட்டை பாதித்த ‘டிட்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட சவாலான சூழ்நிலைகளுக்கிடையிலும் இந்த சாதனை பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் 2018 ஆம் ஆண்டில் மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை 2,333,796 ஆக பதிவாகியிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் அது 2,053,465 ஆக பதிவாகியுள்ளது.
இவ்வருடத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை கடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை வந்த நாடுகளாக பதிவாகியுள்ளன.



