நடப்புச் சம்பியன் மாத்தறை சிட்டிக்கு தொடர்ந்து தோல்வி

decb29

இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில் நடப்புச் சம்பியன் மாத்தறை சிட்டி தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைந்து பி குழுவில் பின்னடைவை சந்தித்துள்ளது.

கொழும்பு, குதிரைப்பந்தய திடலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் மூன்றாவது வாரத்திற்கான போட்டிகள் கடந்த சனிக்கிழமை (27) ஆரம்பமாயின. இதில் முதல் போட்டியாக யாழ்ப்பாணம் செயின்ட் மேரிஸ் அணியை எதிர்கொண்ட மாத்தறை சிட்டி ஆரம்பத்திலேயே தடுமாற்றம் கண்டது. இதனை பயன்படுத்தி முதல் பாதியின் 10 நிமிடங்களுக்குள் கோல் புகுத்திய செயின்ட் மேரிஸ் முதல் பாதி முடிவில் 1–0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய செயின்ட் மேரிஸ் மேலும் ஒரு கோலை புகுத்தி 2–0 என வெற்றியீட்டியது. செயின்ட் மேரிஸ் தனது முதல் போட்டியை சமன் செய்த நிலையில் அந்த அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

எனினும் மாத்தறை சிட்டி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து பி குழுவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஏ குழுவுக்காக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஜாவா லேன் மற்றும் கிரிஸ்டல் பளஸ் அணிகள் மோதின. முதல் பாதி முடிவின்போது கிறிஸ்டல் பளஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தபோதும் இரண்டாவது பாதியில் வைத்து ஜவா லேன் மேலும் ஒரு கோலை பெற்று போட்டியை சமநிலை செய்தது.

இந்த இரு அணிகளும் இன்னும் தனது முதல் வெற்றியை பெறவில்லை. ஜாவா லேன் தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததோடு கிறிஸ்டல் பளஸ் முதல் போட்டியையும் சமன் செய்தமை குறிப்பிடத்தக்கது.