இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் டி20 குழாத்திற்கு ஷதாப் கான் அழைக்கப்பட்டிருப்பதோடு துடுப்பாட்ட வீரரும் பகுதி நேர விக்கெட் காப்பாளருமான கவாஜா நபாய் புதுமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.
மூன்று டி20 போட்டிகளில் ஆடுவதற்காக ஜனவரி ஆரம்பத்தில் இலங்கை வரும் பாகிஸ்தான் அணிக்கு சல்மான் அகா தொடர்ந்து தலைவராக செயற்படவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி–மார்ச் மாதங்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையிலேயே இந்த டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையிலேயே ஆடவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் ஆடி வரும் ஷதாப் கடந்த ஜூன் மாதமே பாக். அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பின் சத்திர சிகிச்சை செய்து கொண்ட நிலையில் உடல் தகுதியை பெற்றே பிக் பாஷ் தொடரில் பங்கேற்றுள்ளார்.
எனினும் தற்போது பிக்பாஷ் தொடரில் ஆடிவரும் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான ஷஹீன் ஷா அப்ரிடி, பாபர் அஸாம், முஹமது ரிஸ்வான், ஹரீஸ் ரவூப் மற்றும் ஹசன் அலி ஆகியோர் பாக். குழாத்தில் இடம்பெறவில்லை.
இதில் 23 வயது நபாய் அண்மையில் அபூதாபி டி20 தொடரில் பங்கேற்றிருந்ததோடு, அண்மையில் பாகிஸ்தான் ஏ அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
வலது கை துடுப்பாட்ட வீரரான அவர் இதுவரை 32 டி20 போட்டிகளில் ஆடி 688 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு 132.81 ஸ்ட்ரைக் ரேட்டையும் பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தான் குழாம்: சல்மான் அகா (தலைவர்), அப்துல் சமத், அப்ரார் அஹமது, பஹீம் அஷ்ரப், பக்கர் சமான், கவாஜா நபாய் (வி.கா.), முஹமது நவாஸ், முஹமது சல்மான் மிராஸ், முஹமது வசீம் ஜூனியர், நசீம் ஷா, ஷஹீப்சதா பர்ஹான் (வி.கா.), சயிம் அயூப், ஷதாப் கான், உஸ்மான் கான் (வி.கா.), உஸ்மான் தாரிக்.


