ஆண்களுக்கான 11 வயதுக்கு உட்பட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையின் டாவி சமரவீர முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். இதன்மூலம் எந்த ஒரு வயதுப் பிரிவிலும் முதல் முறையாக இலங்கை வீரர் ஒருவர் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
10 வயதான டாவி தன்னை விடவும் வயதானவர்களுக்கு எதிராக பெற்ற வெற்றிகள் மூலம் 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உலகின் 11 ஆவது வீரராக இடம்பெற்றுள்ளார்.
அவரது வேகமான முன்னேற்றம் உலக மேசைப் பந்து அரங்கில் அதிக நம்பிக்கை தரும் இளம் வீரராக இடம்பெறச் செய்துள்ளது. இத்தாலியில் நடந்த உலக மேசைப்பந்து இளையோர் போட்டியில் சோபித்ததை அடுத்தே டாவி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தப் போட்டியில் அவர் 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
இது இலங்கை வீரர் ஒருவர் இளையோர் உலக மேசைப்பந்து போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற முதல் சந்தர்ப்பமாக இருந்தது.
கல்கிசை புனித தோமஸ் கல்லூரி மாணவனான டாவி அந்தக் கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதையும் அண்மையில் வென்றிருந்தார்.


