-தீப்தி டி20 யில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை
இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் 15 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை மகளிர் அணி தொடரை 0–5 என முழுமையாக இழந்தது.
திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் (30) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை 41 ஓட்டங்களுக்கே வீழ்த்த இலங்கையால் முடிந்தது. எனினும் மத்திய வரிசையில் வந்த அணித் தலைவி ஹார்மன்பிரீத் கவுர் 43 பந்துகளில் 63 ஓட்டங்களை விலாசி வலுப்பெறச் செய்தார்.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.
பதிலெடுத்தாட வந்த இலங்கை மகளிர்கள் 7 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை இழந்தபோதும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹசியி பெரேரா மற்றும் இமேஷா துலானி இருவரும் 86 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். ஹசினி பெரேரா 42 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றதோடு துலானி 39 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றார். எவ்வாறாயினும் தொடர்ந்து வந்த வீராங்கனைகள் கைகொடுக்கத் தவறினர். குறிப்பாக வேகமாக ஓட்டங்களை பெற முடியாமல் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களையே பெற்றது.
இதன்போது ஒரு விக்கெட்டை வீழ்த்திய சுழல் வீராங்கனை தீப்தி ஷர்மா டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகள் வரிசையில் மேகன் சுட்டை பின்தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார். தீப்தி ஷர்மா இதுவரை 133 டி20 போட்டிகளில் மொத்தமாக 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


