அதிக மது அருந்தி போதையில் தடுமாறிய இங்கிலாந்து வீரர்கள் குறித்து விசாரணை

dec25

ஆஷஸ் போட்டிகளுக்கு இடையே சர்ச்சை

இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்கு இடையே அவுஸ்திரேலியாவின் கடற்கரை நகரான நூசாவில் ஓய்வு எடுத்து அதிக அளவு மதுபானம் அருந்தியது தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இரண்டு மற்றும் மூன்றாவது ஆஷஸ் போட்டிகளுக்கு இடையே குவிஸ்லாந்தின் கடற்கரை நகரில் இங்கிலாந்து அணியினர் நான்கு நாட்கள் ஓய்வு எடுத்துள்ளனர். அதன்போது சில வீரர்கள் அதிக அளவில் மதுபானம் அருந்தி இருப்பதாக விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த பிரிஸ்பானில் முந்தைய இரண்டு நாட்களிலும் கூட வீரர்கள் மதுபானம் அருந்தி இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகத்தில் வெளியான வீடியோ ஒன்றில் இங்கிலாந்து ஆரம்ப வீரர் பென் டெக்கட் மதுபோதையில் இருப்பது தெரிகிறது. இதன்போது அவர் தனது ஹோட்டலுக்கு செல்ல முடியாது தடுமாறுவதையும் காண முடிகிறது. இது தொடர்பில் பிரத்தியேக விசாரணை நடத்துவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை கூறியுள்ளது. எனினும் அடிலெயிட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியின் ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதோடு அந்த அணி இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மிச்சம் இருக்கும் நிலையிலேயே முதல் மூனறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.

‘போட்டிகளுக்கு இடையே ஓய்வு எடுக்கும் வகையில் வீரர்கள் மது அருந்துவது சகஜம்தான். அதேநேரத்தில் அதிக அளவில் மது அருந்துவது ஏற்கக்கூடியதல்ல. அளவுக்கு அதிகமாகக் குடிப்பது அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். இதுதொடர்பாக விரைவில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’ என்று இங்கிலாந்து அணியின் நிர்வாக பணிப்பாளர் ரொபர்ட் கீ குறிப்பிட்டுள்ளார்.

ஆஷஸ் தொடருக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னரே நூசா நகரில் இங்கிலாந்து அணிக்கு ஓய்வு வழங்குவது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இங்கிலாந்து அணி தொடரில் 0–2 என பின்தங்கி இருந்தபோதும் அந்த ஓய்வு திட்டமிடப்பட்டபடி வழங்கப்பட்டது.

நூசா கடற்கரைக் கொண்டாட்டம் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது, இந்தப் பயணம் இங்கிலாந்து வீரர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் என்று ’நல்லவிதமாக’ அவர் யோசித்ததாகக் கருதப்பட்டாலும், தோல்வியினால் அவரது ‘நல்லெண்ணமும்’ இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் இங்கிலாந்து முன்னணி துடுப்பாட்ட வீரர் டக்கல் இந்த ஆஷஸ் தொடரில் வெறும் 16.16 ஓட்ட சராசரியுடன் மொத்தமாக 97 ஓட்டங்களையே பெற்றுள்ளார். அவர் முந்தைய ஆஷஸ் சுற்றுப்பயணத்திலும் இடம்பெற்றிருந்தார். 2017–18 தொடரில் பேர்த்தில் இருக்கும் மதுபான விடுதி ஒன்றில் ஜேம்ஸ் அன்டர்சன் மீது மதுபானத்தை ஊற்றிய விவகாரத்தில் அவர் தொடரின் பாதியில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதோடு அவர் மீது அபராதம் மற்றும் தடையும் விதிக்கப்பட்டது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டி நாளை (26) மெல்பேர்னில் ஆரம்பமாகவுள்ளது.