84 பந்தில் 190 ஓட்டம் விளாசி 14 வயது சூர்யவன்சி சாதனை

decb25

இந்தியாவைச் சேர்ந்த இளம் அதிரடி துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்சி ஆடவர் ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட்டில் சதம் பெற்ற இளம் வீரராக சாதனை படைத்துள்ளார். நேற்று ஆரம்பமான இந்தியாவின் விஜே ஹசரே கிண்ண ஒருநாள் தொடரில் பிஹார் அணிக்காக ஆடும் அவர் அருணாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக சதம் பெற்றதன் மூலமே இந்த சாதனையை படைத்துள்ளார்.

14 வயது மற்றும் 272 நாட்களாகும் சூர்யவன்சி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 84 பந்துகளில் 14 பௌண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 190 ஓட்டங்களை விளாசினார். இதன்போது அவர் 36 பந்துகளிலேயே சதத்தை பூர்த்தி செய்தார்.

சூர்யவன்சி ஆடும் ஏழாவது உள்ளூர் ஒருநாள் போட்டியாக இது இருந்தது. 2025 டிசம்பரில் மத்திய பிரதேசத்திற்கு எதிராகவே அவர் தனது முதல் உள்ளூர் ஒருநாள் போட்டியில் ஆடி இருந்தார்.

இந்த மாத ஆரம்பத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட இந்திய இளையோர் அணியில் ஆடிய அவர் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 95 பந்துகளில் 171 ஓட்டங்களை விளாசி இருந்தார். இதன்போது அவர் இளையோர் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற அம்பத்தி ராயுடு படைத்த சாதனையை முறியடிப்பதற்கு ஆறு ஓட்டங்களே குறைவாக பெற்றிருந்தார். ராயுடு 2002 இல் இங்கிலாந்துக்கு எதிரான இளையோர் போட்டியில் 177 ஓட்டங்களைப் பெற்றதே இன்று வரை சாதனையாக உள்ளது.

அதேபோன்று கடந்த மாதம் டோஹாவில் நடந்த ரைசிங் ஸ்டார் ஆசிய கிண்ண டி20 தொடரில் இந்திய வளர்ந்து வரும் அணியில் இடம்பெறற ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில் 144 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அப்போது அவர் 32 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது அனைத்து வகை டி20 கிரிக்கெட்டிலும் ஆறாவது அதிவேக சதமாக இருந்தது.

முன்னதாக 13 வயதில் ஐ.பி.எல். இல் வாங்கப்பட்ட சூர்யவன்சி ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 101 ஓட்டங்களை பெற்று ஐ.பி.எல். இல் சதம் பெற்ற இளம் வீரராக சாதனை படைத்திருந்தார்.