மீனி ஏலத்தில் 9 வீரர்கள் விலை போகாமல் ஏமாற்றம்
இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) மினி ஏலத்தில் இலங்கை வீரர்கள் மூவர் வாங்கப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் மொத்த ஏழு வீரர்கள் இடம்பெறவுள்ளனர். இதில் மற்ற நான்கு வீரர்களும் தமது அணியுடனான ஒப்பந்தத்தை தக்கவைத்த நிலையிலேயே ஐ.பி.எல். வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அபூதாபியில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற ஏலத்தில் இரண்டாவது அதிக விலையாக இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண இந்திய நாணயப்படி 18 கோடி ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இது இலங்கை நாணயப்படி 61.20 கோடி ரூபாவாகும்.
வனிந்து ஹசரங்க 2 கோடி அடிப்படை விலைக்கு ஏலத்துக்கு வந்தபோது அவரை வாங்குவதில் மற்ற அணிகள் ஆர்வம் இல்லாத நிலையில் அதே தொகைக்கு லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
இலங்கை முன்னணி துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க 75 இலட்சம் ரூபா அடிப்படை விலைக்கு ஏலத்துக்கு வந்த நிலையில் அவரை வாங்குவதில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இறுதியில் டெல்லி அணி 4 கோடி ரூபாவை நிர்ணயித்த நிலையில் கொல்கத்தா அதற்கு போட்டியிடவில்லை.
எனினும் இந்த ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி ரூபாவுடன் வந்த சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவை எவரும் வாங்க முன்வரவில்லை. அதேபோன்று சரித் அசலங்க, குசல் பெரேரா, பினுர பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், துனித் வெள்ளாலகே, ட்ரவீன் மத்தியூ, தசுன் ஷானக்க, குசல் மெண்டிஸ் ஆகியோரும் விலைபேகவில்லை.
ஏற்கனவே ஏஷான் மாலிங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ளது. மாலிங்க 1.20 கோடி ரூபாவுக்கும் கமிந்து மெண்டிஸ் 75 இலட்சம் ரூபாவுக்குமே ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று துஷ்மன்த சமீரவின் ஒப்பந்தத்தை டெல்லி கெபிடல்ஸ் அணி இந்திய நாணயப்படி 75 இலட்சம் ரூபாவுக்கு தக்கவைத்ததோடு நுவன் துஷார 1.60 கோடிக்கு நடப்புச் சம்பியன் பெங்களூர் றோயல் சலஞ்சஸ் அணியுடனான ஒப்பந்தத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்திய பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் 26 தொடக்கம் மே 31 வரை நடைபெறவுள்ளது.


