டி20 உலகக் கிண்ணம் வரை இலங்கை தேசிய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளரான எஸ். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் 3ஆம் நிலை தகுதி பெற்ற பயிற்சியாளரான ஸ்ரீதர் 2014 தொடக்கம் 2021 வரை 300 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இலங்கை அணியின் களத்தடுப்பு தரத்தை உயர்த்தும் வகையில் எதிர்வரும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இலங்கை அணியின் பயிற்சியாளராக செயற்படவுள்ளார். தனது நியமனம் குறித்து ஸ்ரீதர் கூறியதாவது, இலங்கை வீரர்கள் எப்போதும் இயல்பான திறமை, மீட்சித் திறன் மற்றும் குழு மனப்பான்மை கொண்டவர்கள். முறைமை ஒன்றை திணிப்பதற்கு மாறாக விளையாட்டுத் திறன், விழிப்புணர்வு மற்றும் களத்தடுப்பின் பெருமை ஆகியவை இயற்கையாகவே வளரக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் எனது வேலை’ என்றார்.
எனினும் ஸ்ரீதர் இலங்கை கிரிக்கெட்டுக்கு புதுமுகமல்ல. இந்த ஆண்டு ஆரம்பத்தில் அவர் தேசிய உயர் செயல்திறன் நிலையத்தில் 10 நாள் சிறப்பு களத்தடுப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். அவரது நியமனம் கடந்த டிசம்பம் 11 தொடக்கம் எதிர்வரும் மார்ச் 10 வரை நடைமுறையில் இருக்கும்.


