தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) மற்றும் பாகிஸ்தான் சுப்பர் லீக் (பீ.எஸ்.எல்.) போட்டிகள் ஓரே காலப்பகுதியில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.
11ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் 2026 மார்ச் 26 தொடக்கம் மே 3 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மொஹ்சின் நக்வி கடந்த திங்கட்கிழமை (15) அறிவித்தார். மறுபுறம் இந்திய பிரீமியர் லீக் மார்ச் 26 தொடக்கம் மே 31 வரையான காலப்பகுதியில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்கு முழுமையான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்னும் அறிவிக்காதபோதும் அந்தத் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறப்போகும் டி20 உலகக் கிண்ணம் முடிவுற்று மூன்று வாரத்திலேயே ஆரம்பிக்கப்படவுள்ளது. டி20 உலகக் கிண்ணப் போட்டி பெப்ரவரி 7 தொடக்கம் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மறுபுறம் பீ.எஸ்.எல். தொடர் 2025 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வெடித்த எல்லை மோதலுக்கு மத்தியில் ஏப்ரல் 11 தொடக்கம் மே 25 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பருவம் சற்று முன்கூட்டி நடத்தப்படவுள்ளது. என்றபோதும் ஐ.பி.எல். மற்றும் பீ.எஸ்.எல். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் சமகாலத்தில் இடம்பெறவுள்ளது. ஐ.பி.எல் ஆரம்பித்து 20 நாட்களின் பின் பீ.எஸ்.எல். ஆரம்பமாகவுள்ளது. பீ.எஸ்.எல். கடந்த முறைகளை விடவும் ஒரு வாரம் நீண்டதாக நடத்தப்படவுள்ளது.
அந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையும் ஆறில் இருந்து எட்டாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பீ.எஸ்.எல். தொடருக்காக பாகிஸ்தான் தனது சர்வதேச போட்டி அட்டவணையையும் மாற்றவுள்ளதாக நக்வி குறிப்பிட்டுள்ளார். இதில் எதிர்வரும் மார்ச்–ஏப்ரல் மாதங்களில் பாகிஸ்தான் அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணமும் ஒத்திவைக்கப்படவுள்ளது.
பீ.எஸ்.எல். தொடருக்கு முதலீட்டாளர்களை கவரும் வகையில் பாக். கிரிக்கெட் சபை இந்த மாதம் லோட்ஸில் வீதி ஊலா ஒன்றை நடத்தவிருப்பதோடு இவ்வாறாக நிகழ்வு கடந்த வார இருதியில் நியூயோர்க்கில் நடத்தப்பட்டது.
ஐ.பி.எல். 2026 தொடருக்காக அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் விபரத்தை கடந்த நவம்பர் நடுப்பகுதியில் வெளியிட்டிருந்தது. அதேபோன்று இந்தத் தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று அபூதாபியில் நடைபெற்றது.


