முதல் முறையாக ஒருநாள் உலகக்கிண்ணத்தை வென்ற, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நேற்று (5) இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்து அவர்களின் வரலாற்று சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணியை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது.
மகளிர் உலகக்கிண்ணத்தை வென்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணியினர், பிரதமர் மோடியுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர், தொடர்ந்து மூன்று தோல்விகள் மற்றும் சமூக ஊடகங்களில் அவர்கள் சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உலகக்கிண்ணத்தை வென்றுள்ளதை பாராட்டினார்.
மேலும் இந்நிகழ்வின் போது இந்திய மகளிர் அணித்தலைவி ஹர்மன்ப்ரீத் கௌர், 2017 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தோல்விக்குப் பின்னர் பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்து நினைவு கூர்ந்தார்.
துணைத்தலைவி ஸ்மிருதி மந்தனா பேசுகையில், “உலகக்கிண்ணத்தை வெல்லுவதற்கு பிரதமர் மோடி ஊக்கப்படுத்தியதாகவும், அவர் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருந்தார்” எனவும் கூறினார்.
இதனையடுத்து பிரதமருடன் இந்திய அணி வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றனர்.


