தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மூன்று சிக்ஸர்களை விளாசிய இந்திய அனுபவ வீரர் ரோஹித் ஷர்மா ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சஹீட் அப்ரிடியின் 15 ஆண்டு சாதனையை முறியடித்தார்.
ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் இதுவரை 269 இன்னிங்ஸ்களில் ஆடி 352 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் அவர் அப்ரிடி 369 இன்னிங்ஸ்களில் பெற்ற 351 சிக்ஸர்கள் என்ற சாதனையையே முறியடித்தார்.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை சனத் ஜயசூரியவிடம் (270 சிக்ஸர்கள்) இருந்து முறியடித்த அப்ரிடி அந்த சாதனையை கடந்த 15 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த நிலையிலேயே ரோஹித் ஷர்மா அதனை முறியடித்துள்ளார்.
ஏற்கனவே ரோஹித் ஷர்மா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகள் என ஒட்டுமொத்த போட்டிகளிலும் அதிக சிக்ஸர்கள் விளாசியை சாதனையை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் 88 சிக்ஸர்களையும் டி20 போட்டிகளில் 205 சிக்ஸர்களையும் பெற்றிருக்கும் நிலையில் அவர் ஒட்டுமொத்தமாக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 645 சிக்ஸர்களை பெற்றுள்ளார்.
ரோஹித் ஷர்மா தனது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்பத்தில் அதிக சிக்ஸர்கள் பெறவில்லை. தனது மூன்றாவது ஒருநாள் இன்னிங்ஸிலேயே முதல் சிக்ஸரை பெற்ற அவர் 40 ஆவது இன்னிங்ஸில் கன்னி ஒருநாள் சதத்தை பெற்றபோது கூட 1023 பந்துகளுக்கு முகம்கொடுத்த நிலையில் ஐந்து சிக்ஸர்களை மாத்திரமே பெற்றிருந்தார்.
மூன்று ஆண்டுகள் கழித்து அவர் பெங்களூரில் நடைபெற்ற அவுஸ்திரேலியவுக்கு எதிரான போட்டியில் 16 சிக்ஸர்களை பெற்றதோடு அப்போது அது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சாதனையாகவும் இருந்தது. இதன்மூலம் அவர் அந்தப் போட்டியில் இரட்டைச் சதம் பெற்றிருந்தார். அது தொடக்கம் அவர் 102 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 36 சிக்ஸர்களையே பெற்றதோடு சராசரியாக 102.14 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் வீதம் பெற்றார்.
அதன் பின்னரே ரோஹித் ஷர்மா சிக்ஸர் விளாசும் வேகம் அதிகரித்தது. இதன்படி அவர் தொடர்ந்து ஆடிய 167 இன்னிங்ஸ்களில் 316 சிக்ஸர்களை பெற்றுள்ளார். சராசரியால் 27.35 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் வீதம் பெற்றுள்ளார்.


