உலகளாவிய போர்ச் சூழல்கள் மற்றும் ‘டித்வா’ சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும், இலங்கை அடைந்துள்ள பாரிய பொருளாதார வெற்றிகளுக்குத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது மே தினச் செய்தியில் தேசத்தின் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில், 1977 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக்குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை நாடு பதிவு செய்துள்ளதாகவும், 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகூடிய அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டின் ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைத் தாண்டியதுடன், வரலாற்றில் இல்லாத அளவு அதிகூடிய வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கிடைக்கப் பெற்றுள்ளமையையும் ஜனாதிபதி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
உழைக்கும் மக்களின் மதிப்பைப் புரிந்து கொண்டு, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்துள்ளதோடு, 2016 ஆம் ஆண்டிற்குப் பின் பணியில் இணைந்த அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதிய உரிமையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமை மற்றும் மாணவர்களின் ‘மஹபொல’ புலமைப்பரிசில் தொகை 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை போன்ற சலுகைகளையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரலாற்றில் வழங்கப்பட்ட அதிகூடிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி, ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் ஊடாக அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னரை விடவும் உயர்நிலைக்குக் கொண்டு செல்ல அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்தியை மீட்டெடுத்து “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற இலக்கை அடைவதற்கு உழைக்கும் மக்களே முதன்மைச் சக்தியாகத் திகழ்வதாக ஜனாதிபதி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக நவீன உலகிற்கு ஏற்றாற்போல் நாட்டை மாற்றியமைப்பதே தமது நோக்கமெனத் தெரிவித்துள்ள அவர், ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான இந்தச் கூட்டு முயற்சிக்கு அனைத்துத் தொழிலாளர்களையும் தங்களது மனசாட்சிக்கு இணங்க எம்முடன் ஒன்றிணையுமாறு சகோதரத்துவத்துடன் அழைப்பு விடுத்துள்ளார்.


