டி20 உலகக் கிண்ணத்தில் பி குழுவுக்கான தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணி ஓமானை இன்று கண்டி, பல்லேகலவில் எதிர்கொள்ளவுள்ளது.
பகல் போட்டியாக காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆட்டம் இலங்கை அணிக்கு அதிக சவாலானதாக இல்லாதபோதும் புள்ளிகள் மற்றும் ரன் ரேட்டை அதிகரித்து சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கியமானதாக உள்ளது.
இலங்கை அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஒப்பீட்டளவில் இலங்கை அணி அடுத்து ஆடவுள்ள இரண்டு குழுநிலை போட்டிகளை விடவும் இந்த ஆட்டம் வெற்றிக்கு இலகுவான வாய்ப்பாக உள்ளது. ஓமான் தனது முதல் போட்டியில் சிம்பாப்வேயிடம் 8 விக்கெட்டுகளால் மோசமான தோல்வியை சந்தித்தே இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது. எனினும் இலங்கை அணி தனது முன்னணி பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கவை இழந்த நிலையிலேயே உலகக் கிண்ணத்தின் எதிர்வரும் போட்டிகளை ஆட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. உபாதை காரணமாகவே ஹசரங்க உலகக் கிண்ணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இன்றி அணியை கட்டமைப்பதற்கு இன்றைய போட்டி முக்கியமாக அமையும். அதேபோன்று அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் பெரும் சரிவை காண்பித்தது. கமிந்து மெண்டிஸ் மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் சிறப்பாக ஆடியபோதும் மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இன்றைய ஆட்டத்தில் தடுப்பாட்ட வரிசையில் சில மாற்றங்கள் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
இலங்கை அணி ஓமானை டி20 சர்வதேச போட்டி ஒன்றில் எதிர்கொள்வது இது முதல் முறையாக அமையவுள்ளது. இதற்கு முன்னர் 2023 உலகக் கிண்ணத்தில் ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றில் மாத்திரம் ஓமானுடன் ஆடிய இலங்கை அணி, அந்த ஆட்டத்தை 210 பந்துகளை மிச்சம் வைத்து 10 விக்கெட்டுகளால் வென்றது.


